Latest News

  

100 சீட்... கூட்டணி ஆட்சி... வலைவிரிக்கும் திமுக: சிக்குமா பாஜக


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் இருந்தாலும் தேர்தல் களம் படு பரபரப்பாகவே இருக்கிறது. ஆளும் அதிமுகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது திமுக. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை திமுக. அதே நேரத்தில் பாஜக உடன் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல் என பத்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த திமுக, கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கை கழுவிவிட்டது. இந்த நிலையில் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்புடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது திமுக. இதன் ஒருபகுதியாகவே நமக்கு நாமே பயணத்தின் போது கோவில்களுக்கு செல்வதோடு, இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல என்று கூறி வருகிறார் ஸ்டாலின் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். தேமுதிகவிற்கு ஒரு பக்கம் வலைவீசினாலும், மறுபக்கம் தேசிய கட்சியான பாஜகவிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலினுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறார்களாம்.

திமுகவின் கூட்டணி முடிவை மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார்களாம். இதற்கு, யோக கலை வித்தகர் ஒருவரும் உதவியுள்ளாராம். அதிமுக பாசம் கொண்ட பாஜக துவக்கத்தில் பிடி கொடுக்காத நிலையில் தற்போது இசைந்திருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் 2 ஜி வழக்கு சம்பந்தமாக, எந்த உதவியும் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டதாம். தே.மு.தி.க. - பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வரலாம் என்றும் மொத்தமாக, 100 சீட் வரை வழங்கப்படும்; அதை பிரித்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதை தொடர்ந்து, தே.மு.தி.க., வுடன், பா.ஜ.க தரப்பில் பேசி உள்ளனராம். இந்த யோசனையை தே.மு.தி.க., ஆலோசித்து வருகிறதாகவும் கூறப்படுகிறது. எனவேதான், ஓசூரில் நடைபெற்ற மக்கள் பணி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய விஜயகாந்த், அதிமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டேன் என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட பாமக திமுக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக்கொள்ளுமா என்பது யோசிக்க வேண்டிய விசயம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.