காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு விமான நிலையங்களில் சோதனையிடப்படுவதிலிருந்து அளிக்கப்பட்டு வந்த விதி விலக்கை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விதி விலக்கு தனக்குத் தேவையில்லை, தாராளமாக நீக்கிக் கொள்ளலாம் என்று வதேராவே சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த சலுகையை தற்போது மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த உத்தரவுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உத்தரவு சிவில் விமானப் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்படும் என்றார். 33 வகையான பிரமுகர்களின் பட்டியலில் இதுவரை வதேரா இருந்து வந்தார். இவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சிவில் விமானநிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படாமல் விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலிலிருந்து தற்போது வதேரா நீக்கப்படுகிறார். எஸ்பிஜி எனப்படும் கருப்புப் பூனைப் பாதுகாப்பு அளிக்ககப்படுவோர்தான் இந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றனர். இந்தப் பட்டியலில் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதிலிருந்து வதேரா மட்டும் தற்போது நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு முன்பு கூறுகையில், இவரிடம் என்ன விசேஷம் இருக்கிறது. இவர் என்ன அவ்வளவு சிறப்பு வாய்ந்த மனிதரா. மற்ற இந்தியக் குடிமக்களை விட இவர் விசேஷமானவரா. நான் அப்படி நினைக்கவில்லை. இவருக்கு சிறப்புச் சலுகை தேவைப்படுவதாகவும் நான் கருதவில்லை என்று கூறியிருந்ாதார். இந்தப் பட்டியலிலிருந்து வதேரா மட்டுமே நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இப்பட்டியலில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆளுநர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment