திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் திமுக கூட்டணி இப்போது இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத நிலையில் எப்படி அந்தக் கூட்டணியை உடைக்க முடியாது என்று கருணாநிதி கூறுகிறார் என்றுதான் புரியவில்லை. திமுக கூட்டணியில் சொல்லிக் கொள்ளும் படியாக யாரும் இல்லை என்பதே நிதர்சனம். புதிய தமிழகம் தலைவர் திமுக தரப்புடன் நெருக்கமாக இருக்கிறார். அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூரில் ஏற்பட்ட சில கசப்புணர்வுகளையும் மீறி இந்திய தேசிய முஸ்லீம் லீக் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் உள்ளது. இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் யாருமே திமுக கூட்டணி என்ற கட்டுக்குள் இல்லை. வருகிற சட்டசபைத் தேர்தலுக்கும் திமுக கூட்டணி வலுவானதாக அமையும் என்று சொல்வதற்கில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேச்சும் உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என்று கருணாநிதி பேசியிருப்பது யோசிக்க வைக்கிறது.
அறிவாலயப் பேச்சு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் கருணாநிதி பேசுகையில், இன்னும் சில மாதங்களில் தேர்தல் புயல் வரவிருக்கிறது. புயலால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். புயல் வீசினால் அதை சமாளித்து விடலாம். எந்த புயலையும் தடுக்கும் ஆற்றல், தாங்கும் ஆற்றல் கொண்டது இந்த இயக்கம்.
நேற்று கூறியதை இன்று மறந்து விடுகிறார்கள் இந்த நாட்டில் என்ன நடக்கிறது. நேற்று கூறியதை இன்று மறந்து விடுகிறார்கள். அந்த ஏமாற்று வித்தையின் தொடர்ச்சியாக ஏதேதோ கூத்து நடத்துகிறார்கள். அது பற்றி கவலைப்பட தேவையில்லை. நம்மை நாமே காப்பாற்றி கொள்வோம். இந்த திறமை, வீரம், ஆற்றல் அனுபவம் உடையது திமுக. இன்று உலக அரசியல் கட்சிகள் அனைத்தும் நம்மைப் பார்த்து வியக்கும் வகையில் உயர்ந்துள்ளோம். இந்த வளர்ச்சி இன்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்றது அல்ல. நமது வளர்ச்சிக்கு ஈடாக எதையும் காட்டமுடியாது.
எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எந்த புயல் வந்தாலும் அதனை திமுக தாங்கி நிற்கும். இளைஞர்கள் இருக்கும் வரை திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. திராவிடத்தை அழிக்க முயன்றால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்.
யாருக்கும் பயப்படுபவர்கள் அல்ல நேற்று கூறியதை இன்று மறந்துவிடுபவர்களே ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். நாம் யாருக்கும் பயந்து பணிபவர்கள் அல்ல. அதே நேரத்தில் யாரையும் துன்புறுத்தி புறங்காட்டி ஓடுங்கள் என்று சொல்கிறவர்கள் அல்ல. நாம் அமைதியானவர்கள், அமைதிக்குப் பெயர் போனவர்கள், அமைதி வழியில் இயக்கத்தை நடத்தி பழக்கமுடையவர்கள்.
அஞ்சாதீர்கள் உடன் பிறப்புகள் யாரும் இனி அஞ்சத் தேவையில்லை. என்ன இப்படி பேசுகிறாரே, ஒரு வேளை கருணாநிதியின் மனதில் எதிர்காலத் தேர்தலும், அந்தத் தேர்தலிலே இணைய இருக்கிற தோழமைக் கட்சிகளும் ஏதாவது தகராறிலே இருககிறார்களா என்றெல்லாம் எண்ணக் கூடும். அப்படி எண்ணினால் ஒன்றைச் சொல்லுகின்றேன். யார் இந்தக் கூட்டணிக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கின்ற முயற்சிக்கு யார் தீங்கு இழைத்தாலும், யார் அதை உடைக்க நினைத்தாலும் அவர்களால் நிச்சயமாக உடைக்க முடியாது. உடைக்க நினைப்பவர்கள் உடைந்து போவார்கள் என்று கூறினார் கருணாநிதி.
No comments:
Post a Comment