Latest News

டாக்டர்களின் அலட்சியமே அப்துல் கலாமின் மரணத்துக்குக் காரணம்... உதவியாளர் பொன்ராஜ் வேதனை


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு, சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவருடைய முகம் கறுப்பாக மாறிப்போனதற்கு, அங்குள்ள டாக்டர்களின் தவறான சிகிச்சை முறையும் ஒன்று எனவும் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் வேதனையுடன் கூறியுள்ளார். கடந்த, ஜூலை, 27ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மேகாலாயா மாநிலம், ஷில்லாங்கில், ஐ.ஐ.எம்., நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற போது, மயங்கி கீழே விழுந்து மரணமடைந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடந்த சம்பவம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

அவருடைய மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளது. ஆனால், டாக்டர் குழு பரிசோதனையில், இயற்கை மரணம் தான் என்பது உறுதியானது. அப்துல்கலாம், ஐ.எஸ்.ஆர்.ஓ.,வில் விஞ்ஞானியாக பணியாற்றியபோது, அவருடன் இணைந்து பணியாற்றியவர், மதுரையைச் சேர்ந்த பொன்ராஜ். அதன்பின், குடியரசுத் தலைவராக பதவியேற்றது முதல், அவருடைய சிறப்பு ஆலோசகராகவும் இருந்து வந்தார். சேலத்தில் பொன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 1996ம் ஆண்டு முதல், அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றியும், அதன்பின், ஆலோசகராகவும் இருந்து வந்தேன். அவருடைய மரணம் எதிர்பார்க்காத ஒன்று. நான், அப்போது, மதுரை வந்து விட்டேன். நான் கேள்விப்பட்ட வரை, மேகாலயா சென்ற அவர், அம்மாநில ஆளுநர் சண்முகநாதனுடன் இணைந்து சாப்பிட்டு விட்டு, ஐ.ஐ.எம்., நிறுவனத்துக்கு சென்றார். அவருடன் எந்த மருத்துவக்குழுவும் செல்லவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். அங்கு நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அவர், திடீரென நெஞ்சில் கைவைத்தவாறு, வாயை திறந்தபடி கீழே விழுந்துள்ளார். அங்கு, யாராவது டாக்டர்கள் இருந்தால், காப்பாற்றியிருக்கலாம். அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு சென்றுள்ளனர். 

இந்தியாவில் மருத்துவத்தைப் பற்றி தெரியாத டாக்டர்கள் உள்ள மாநிலங்களில், மேகாலயாவும் ஒன்று. இதேபோல், பத்துக்கும் மேற்பட்ட மாநிலம் உள்ளது. டாக்டர்கள் ஏதேதோ சிகிச்சை அளிக்க, அதில் தான், அவருடைய முகம் கறுத்துப்போனது. டாக்டர்கள் அலட்சியமும், அவருடைய மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என கூறலாம். மற்றபடி, கலாம் மறைவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். செப்டம்பர் 14 ஆம் தேதி, அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன். இதன் மூலம், நாடு முழுவதும், 15 கோடி மரம் நடவும், மாநிலத்துக்கு, 100 ஊரணிகளை சீரமைக்கவும், குடிபோதையில் இருந்து, 10 ஆயிரம் பேரை விடுவிக்கவும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறந்த தலைவனாக கொண்டு வரவும் முடிவு செய்துள்ளோம். இதற்கென, கலாம் பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் இணையலாம். சிறந்த சேவகர்களுக்கு, கலாம் பெயரில், சிறந்த சேவாரத்னா விருது வழங்கி கவுரவிக்க உள்ளோம். கலாம் கனவை நினைவாக்க, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாணவர்களிடையே பேசி வருகிறேன். அவர் விட்டுச்சென்ற பணியை, நான் தொடர விரும்புகிறேன்.இவ்வாறு, பொன்ராஜ் கூறினார். 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.