நடைபயணத்தை விளம்பரத்திற்காக செய்கிறீர்களா என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி மாணவி ஒருவர் திணறடித்தார். நமக்கு நாமே - மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை ஸ்டாலின், கடந்த 20 ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் தொடங்கினார். பல்வேறு ஊர்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் மதுரை மாவட்டத்திற்கு வந்தார்.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டார். நடைப்பயணத்தின்போது, பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்றார். தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவ, மாணவியருடன் உரையாடினார். அப்போது, ஒரு மாணவி, இந்த நடைப்பயணம் விளம்பரத்துக்காக செய்கிறீர்களா?, இல்லை ஆட்சிக்கு வந்தாலும் நடை பயணம் தொடருமா? என்று ஸ்டாலினிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நீங்கள் இந்த பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த மாணவியிடமே திருப்பிக் கேட்க, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அந்த மாணவி கூறினார். அந்த நம்பிக்கையோடு இருங்கள் என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் பேசிய பெண்கள், மகளிர் குழுவினருக்கு கடன் கிடைக்கவில்லை. முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ரேஷன் பொருள்கள் சரிவர விநியோகம் செய்வதில்லை என்று புகார் தெரிவித்தனர். மதுபானக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என பெண்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துவது, கல்விக் கடன், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை ரத்து செய்வது ஆகிய கோரிக்கைகளையும் அவர்கள் ஸ்டாலின் முன்வைத்தனர்.
No comments:
Post a Comment