தனது மகன் உள்பட குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது...
ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, சிலர் தி.மு.க.,வுக்கு சென்றுள்ளனர்; அவர்கள், பதவிக்காகவே சென்றுள்ளனர். அதற்கு ஏற்றார் போல, ம.தி.மு.க.,வில், மாநில செயலாளர்களாக இருந்த தாமரைக்கண்ணனுக்கு, சேலம் தொகுதியிலும், பாலவாக்கம் சோமுவுக்கு, காஞ்சிபுரம் தொகுதியிலும், 'சீட்' கொடுப்பதாக உறுதியளித்து உள்ளனர். நான் ஒரு போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. மத்திய அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, அந்த பதவியை, கட்சியின் பொருளாளராக இருந்த கண்ணப்பனுக்கும், துணை பொதுச் செயலராக இருந்த செஞ்சி ராமச்சந்திரனுக்கும் வாங்கிக் கொடுத்தேன். சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை எம்.பி.,யாக்கினேன். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன் நான். என் மகன் உட்பட, குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். தமிழகத்தில், அனைத்து கட்சிகளையும் சேர்த்து, மொத்தம், 35 சதவீத ஓட்டுகள் தான் உள்ளன. மீதமுள்ள, 65 சதவீதம் பேர்,
நடுநிலையாளர்கள்; அவர்கள், ம.தி.மு.க.,வுக்கு வாக்களிப்பார்கள். அதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் நல்ல மாற்றம் ஏற்படும். இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment