ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் திட்டமிட்ட கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக கேரளா எல்லை பகுதியான திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் கேரளா நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இன்று காலை செங்கோட்டையிலிருந்து புளியரைக்கு கற்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி தனது ஷேர் ஆட்டோவில் அடிவெட்டி, அவரது மகன் மகேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு புளியரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார். அப்போது கட்டளைக் குடியிருப்பில் இருந்து இரண்டு பெண்கள் புளியரையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற இவர்களது ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதே போல் மேலப்புதூர் பகுதியை சார்ந்த முருகன் என்பவர் புளியரை செல்வதற்காக மேலபுதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் ஏறியுள்ளார். 2 பெண், 3 ஆண்களை ஏற்றிக்கொண்டு புளியரை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது. புதூர் என்ற பகுதியை நோக்கி செல்லும் போது கேரளாவிலிருந்து செங்கோட்டையை நோக்கி வந்த லாரி ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோ முன் பகுதி சுக்கு நூறாகி அப்பளம் போல் நொறுங்கியது.
ஆட்டோ ஓட்டிய கருப்பசாமி வயல் வரப்பில் தூக்கி வீசப்பட்டு பலியானார். அப்படியிருந்தும் லாரியின் வேகம் குறையாமல் சில நூறு அடி ஆட்டோவை இழுத்துச் சென்றதில் ஆட்டோவில் பயணித்த அடிவெட்டி, முருகன், மற்றும் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாயினர். ஆட்டோவில் இருந்த மகேஷ் என்பவர் படுகாயமடைந்தார் உடனடியாக காயமடைந்த மகேஷை நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார். இது குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து பரப்பரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் லாரி ஓட்டுனர் திருமலைகுமார் ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி இருவரும் உறவினர்கள் என்றும் இவர்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் குளத்தில் விஷம் வைத்து மீன்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக முன் பகை இருந்து வந்ததாகவும் புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக நேற்றே கேரளாவில் லோடு இறக்கிவிட்டு வந்த திருமலைகுமார் காத்திருந்து இந்த திட்டமிட்ட கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் அதற்கு காரணமாக திருமலைகுமார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் போது கையில் கத்தியோடு சென்றதாகவும்,கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்துவது வழக்கம் ஆனால் விபத்தை ஏற்படுத்திய லாரி சில நூறு அடி தூரம் ஆட்டோவை இழுத்துச் சென்று நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்பகை காரணமாக குடும்பத்தினர் 2 பேர், பயணிகள் 3 பேர் என மொத்தம் ஆட்டோ ஓட்டுனரையும் சேர்த்து 6 பேர் சம்பந்தமே இல்லாதவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக -கேரளா எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment