ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் டெஸ்ட் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கில்கிறிஸ்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைக்கு உரிய விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் பிராட் ஹாடின் (37). இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3266 ரன்களும், 126 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 3122 ரன்களும் குவித்த ஹாடின், 34 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவ்வாண்டு முடிந்த உலக கோப்பை கிரிக்கெட்டுடன் ஹாடின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், இவரின் 4 வயது மகள் மியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற ஹாடின், அடுத்த 4 போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஹாடின் ஓய்வு பெற்றுள்ளார். இது குறித்து இவர் கூறுகையில், பிற மனிதர்களை போல நானும் குடும்பத்திற்குதான் முன்னுரிமை தருவேன். எனது மகள் மருத்துவமனையில் இருந்தபோது, ஆஸ்திரேலிய அணிக்காக நூறு சதவீத முழு மனதுடன் விளையாட முடியவில்லை. எனது மகளுடன் இருக்க விரும்புவதால், சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறியுள்ளார். பிக் பாஷ் தொடரில் மட்டும் ஹாடின் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment