மறைந்த மக்களின் ஜனாதிபதி மாமேதை அப்துல் கலாமின் முதலாவது திருவுருவச் சிலை ஹைதராபாத்தில் இமராத் ஆராய்ச்சி மைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்த தமிழகத்தின் அப்துல் கலாம் கடந்த மாதம் காலமானார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் அப்துல்கலாம் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். மேலும் அப்துல்கலாம் நினைவைப் போற்றும் வகையில் பாம்பனில் அவருக்கு முழு உருவச் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாகவே ஹைதராபாத்தில் அப்துல்கலாமால் உருவாக்கப்பட்ட இமராத் ஆராய்ச்சி மையத்தின் குடியிருப்பில் அவருக்கான சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.-ன் ஓர் அங்கமாகும்.
3
ஹைதராபாத் இமராத் ஆராய்ச்சி மையக் குடியிருப்பில் கலாம் தங்கியிருந்த ஆசிரியர் குடியிருப்புக்கு அருகில்தான் தற்போது அவரது மார்பளவு வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதுதான் மக்கள் ஜனாதிபதிக்கு அமைக்கப்பட்டுள்ள முதலாவது திருவுருவச் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவுருவச் சிலையை பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ஜி. சதீஷ் ரெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், டி.ஆர்.டி.ஓ. இயக்குனர் சதீஷ் குமார் மற்றும் விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment