லலித் மோடி விவகாரத்தில் எந்த தவறுமே செய்யவில்லை; என் மகளும் லலித் மோடியிடம் பணம் வாங்கவில்லை என்று லோக்சபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக பதிலளித்துள்ளார். இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்த விவகாரம் குறித்து லோக்சபாவில் இன்று குறுகிய கால விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
பின்னர் இதற்கு பதிலளித்து பேச சுஷ்மா ஸ்வராஜ் எழுந்தார். ஆனால் விவாதத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தலையிடக் கூடாது; அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த அமளிக்கு இடையே லோக்சபாவில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது: லலித் மோடியை தலைமறைவு குற்றவாளி என்று எந்த ஒரு நீதிமன்றமும் பிரகடனம் செய்யவில்லை. லலித் மோடியின் விசாவைப் பெறுவதற்கான வழக்கறிஞராக எனது கணவர் செயல்படவில்லை. லலித் மோடிக்கு மொத்தம் 11 வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் என் மகள். அவர் லலித் மோடியிடம் பணம் பெறவில்லை. தற்போது நீதி கிடைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு அல்ல.. எனக்குத்தான் லலித் மோடியின் வழக்குகளுக்கான எனது கணவரோ, மகளோ பணமே வாங்கியது இல்லை. லலித் மோடிக்கு ரகசியமாக எந்த ஒரு உதவியும் செய்தது இல்லை போபால் விஷவாயு கசிவு வழக்கின் குற்றவாளி வாரன் ஆண்டர்சனையும் போபர்ஸ் பீரங்கி பேர குற்றவாளி குவாத்ரோச்சியையும் ரகசியமாக நாட்டை விட்டு தப்பவிட்டது காங்கிரஸ்தான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த சிதம்பரம், மனைவி நளினியை வருமான வரித்துறையின் வழக்கறிஞராக்கினார். சிதம்பரத்தின் மனைவி நளினி, சர்ச்சைக்குரிய சாரதா நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ1 கோடி பணம் பெற்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவ்வபோது சுயபரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறவர்.. இனி வெளிநாட்டுக்குச் செல்லும் போது ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை மீண்டும் படித்து பார்க்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகாலமாக லலித் மோடிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்தார். ஆனாலும் அவரது விளக்கத்தை ஏற்கமறுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment