லோக்சபாவில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் முன்வைத்த கடும் விமர்சனங்களால் கொந்தளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ஆட்சேபம் தெரிவித்தார். லோக்சபாவில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் குறித்து இன்று விவாதம் நடைபெற்றது. சுமார் 2 மணிநேரம் 30 நிமிடம் விவாத்துக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சுமார் 1 மணிநேரத்துக்கும் அதிகமாக வாதத்தை முன்வைத்தார். சுஷ்மா ஸ்வராஜை தொடர்ந்து விமர்சித்து வந்த கார்கே ஒருகட்டத்தில் வசுந்தரராஜே சிந்தியாவையும் காட்டமாக தாக்கத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.பி கவுதம், சோனியாவின் கருப்பு பணம்தான் ஐ.பி.எல். போட்டிகளில் புரள்கிறது என்று ஒரு போடு போட்டார். இதை சற்றும் எதிர்பாராத சோனியா அதிர்ச்சியுடன் இருக்கையை விட்டு எழுந்தார். அப்போது அலிகார் பா.ஜ.க. எம்.பி. சதீஷ், லலித் மோடியை சோனியாவின் சகோதரி கூட சந்தித்து பேசினார் என இன்னொரு போடு போட்டார்.. இதைபற்றியெல்லாம் கார்கே ஏன் பேசவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதனால் கொந்தளித்த சோனியா சக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சபையின் மையப்பகுதிக்கு வந்து ஆட்சேபம் தெரிவித்தார். பின்னர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சோனியா, பா.ஜ.க. எம்.பி. கவுதம் தெரிவித்த விமர்சனத்தால்தான் தாம் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment