நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவரான சாத்வி பிராச்சிக்கு ராஜ்யசபா செயலகம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்பதை வலியுறுத்தி எம்.பி.க்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதிக்கு இறுதி கருணை மனு அனுப்பியிருந்தனர். இருப்பினும் யாகூப் மேமன் கடந்த மாதம் 30-ந் தேதி தூக்கிலிடப்பட்டார்.
இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாகூப் மேமனுக்கு எம்.பி.க்கள் ஆதரவு அளித்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த சாத்வி பிரச்ச்சி, நாடாளுமன்றத்திலேயே ஒன்றிரண்டு தீவிரவாதிகள் இருக்கின்றனர். தீவிரவாதி என நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த தீவிரவாதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தீவிரவாதிகள்தான் என்று கூறியிருந்தார். எம்.பி.க்களை தீவிரவாதிகள் என சாத்வி பிராச்சி கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் சாத்வி பிராச்சிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் கே.கேசவ ராவ் உள்ளிட்ட 20 எம்.பி.க்கள் பிராச்சிக்கு எதிரான நோட்டீஸை ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியிடம் அளித்தனர். அத்துடன் இந்த உரிமை மீறல் நோட்டீஸில் காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, டி.ராஜா, சமாஜ்வாதி கட்சியின் நீரஜ் சேகர், மார்க்சிஸ்ட் கட்சியின் தபன் சென் ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர். தற்போது இதை ஏற்று ராஜ்யசபா செயலகம் சாத்வி பிராச்சிக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment