சட்டவிரோத டெலிபோன் இணைப்பக வழக்கில் சி.பி.ஐ.யிடம் சரணடைந்து கைதாகாமல் இருக்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் தமக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்த்தில் தமது வீட்டில் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் ஒரு தனி தொலைபேசி இணைப்பகத்தையே தயாநிதி மாறன் நடத்தினார் என்பது குற்றச்சாட்டு. இந்த இணைப்பகங்கள் மூலமாக தமது சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழும டிவி சேனல் ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதும் புகார்.
இது தொடர்பான வழக்கில் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி ஆஜராகும்படி தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா அவரது மனுவை விசாரித்து, மனுதாரருக்கு 6 வாரம் இடைக்கால முன் ஜாமீன் அளிப்பதுடன், இந்த காலக்கட்டத்தில் வழக்கு விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்காவிட்டால், நீதிமன்றத்தை சிபிஐ அதிகாரிகள் அணுகலாம் என்றும் உத்தரவிட்டார். பின்னர் சிபிஐ விசாரணைக்கு தயாநிதி மாறன் முழுமையாக ஒத்துழைக்காததால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரித்து வந்தார். தயாநிதி மாறன் தரப்பில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சிபிஐ சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலனும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன் நேற்று தீர்ப்பளித்தார்.
இதன்படி தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது; 3 நாட்களுக்குள் தயாநிதி மாறன் சி.பி.ஐ.யிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த விசாரணையின் போது, தயாநிதி மாறன் தரப்பு தங்கள் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என வாதிட்டது. ஆனால் நீதிமன்றமோ, சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்பதாக தெரிவித்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது அறிக்கையில், தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை அளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதனடிப்படையில் தயாநிதியின் முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் ரத்து செய்தார். இதனை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான பெஞ்ச் முன்பாக தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மாறனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. எனவே, மாறன் இடைக்கால முன்ஜாமீன் ரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment