நெல்லை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய ஹெல்மெட் உத்தரவில் இருந்து, வக்கீல்கள், பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளுக்கு கூட விலக்கு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், டூவீலர் ஓட்டுவோர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்போருக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இதை தமிழக காவல்துறை உறுதியாக அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேண்டுமென்றே ஹெல்மெட் அணியாமல் டூவீலர்கள் ஓட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், வாகன சோதனையின்போது, பிடிபடும் வக்கீல்களும், தங்களது பதவியை கூறி போலீசாரை மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்று நெல்லை வந்திருந்த ஹைகோர்ட் தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல், நிருபர்களிடம் கூறுகையில், "ஹெல்மெட் அணிவதில் இருந்து வக்கீல்கள், பத்திரிகையாளர்களுக்கு விதிவிலக்கு கிடையாது. நீதிபதிகளுக்கு கூட விதிவிலக்கு கிடையாது. உத்தரவு அனைவருக்குமே பொதுவானது" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment