பெங்களூரு: கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடா. இவர் டெல்லியில் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அலுவல்களை முடக்கியுள்ளனர். ஆனால், கர்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மக்களவையில் விதி எண் 193-இன் கீழ் விவாதிக்க அனுமதிக்கக் கோரி, மக்களவைத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருந்த கடிதம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. விவசாயிகளின் தற்கொலைக்கான காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது? அதற்கான இழப்பீடு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்.
இதனிடையே, சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோரது ராஜிநாமாவை வலியுறுத்தி திங்கள்கிழமையும் (ஜூல 27) நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற அனுமதிக்கமாட்டோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனவே, நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க திங்கள்கிழமையும் வாய்ப்பு இருக்காது. எனினும், விவசாயிகள் தற்கொலை பிரச்னையை நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி, டெல்லியில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். நமது நாட்டின் அரசியல் நிலையை அறிந்து வேதனைப்படுகிறேன். எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என்றும் தோன்றுகிறது. இதுபோன்ற மோசமான அரசியல் நிலைமையில் இன்னும் உயிரோடு இருக்கிறோமே என்றும் வருந்துகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் தற்கொலை குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்தே தேவகவுடா இந்த உண்ணாவிரத முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment