திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல்முறையாக கடற்படை விமானம் மூலம் திருவனந்தபுரத்திலிருந்து கொச்சி வரை விரைவாக கொண்டு செல்லப்பட்ட இதயத்தை தானமாக பெற்ற 47 வயது ஆட்டோ டிரைவர் உயிர் பிழைத்த சம்பவம் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்களால் அறிவிக்கப்பட்ட நீலகண்ட ஷர்மா என்பவரின் உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதாக அவரது உறவினர்கள் நேற்று அறிவித்தனர். அவரது உடல் உறுப்புகளில் சில பாகங்கள் உள்ளூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதயத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக மாநில வாரியான காத்திருப்போர் பட்டியலை ஆய்வு செய்த டாக்டர்கள், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிவரும் ஆட்டோ டிரைவரான மேத்யூ அச்சுதன் என்பவர் மாற்று இதயத்துக்காக காத்திருப்பது தெரியவந்தது. ஆனால், திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி செல்ல வேண்டுமானால் சுமார் ஐந்து மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். அங்கு சென்று சேர்ந்த பின்னர் சுமார் நான்கைந்து மணிநேர ஆபரேஷன் வரை அந்த இதயம் உயிர்ப்புடன் துடித்துக் கொண்டிருக்க இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்த டாக்டர்கள், அந்த இதயத்தை கொச்சிக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும் என திருவனந்தபுரம் பகுதி கடற்படையினரை கேட்டுக்கொண்டனர்.
அவர்களும் இதற்கு சம்மதித்ததையடுத்து நேற்றிரவு கடற்படைக்கு சொந்தமான ட்ரோனியர் விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு நீலகண்ட ஷர்மாவின் இதயம் சில நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆட்டோ டிரைவர் மேத்யூ அச்சுதன் உடலில் அது கச்சிதமாக பொருத்தப்பட்டது. இந்தியாவிலேயே பாதுகாப்புத்துறை சார்ந்த மருத்துவ உதவி என்ற நடைமுறையை கடந்து, பொதுமக்களின் மருத்துவ பயன்பாட்டுக்காக கடற்படைக்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment