சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் மட்டுமே இருக்கிறது. தமிழக அரசியல் களம் இப்போதே பரபரப்பாக இருக்கிறது. ஆளும் அதிமுகவில் அனைத்து கட்டளைகளும் ஜெயலலிதாவிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதால் புயலுக்கு முந்தைய அமைதி நிலை அங்கு நிலவுகிறது. முதல்வர் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவினாலும் அதிமுகவில் சத்தமில்லாமல் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தபணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுநாள் வரை அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்த பாமகவோ இந்த முறை யாருடனும் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு களத்தில் இறங்கிவிட்டது. ஒவ்வொரு மண்டலங்களாக மாநாடு நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். அன்புமணியும் மாவட்டந்தோறும் தோறும் போராட்டங்களை நடத்தி வருகிறார். திமுகவில் மு.க.ஸ்டாலினும் களத்தில் குதித்து விட்டார். தலைவர் கருணாநிதியிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்து விட்டதால் விரைவில் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஆகஸ்ட் முதல் மக்களை சந்திக்க தயாராகி வருகிறார். அதோடு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தனி வியூகம் அமைத்து தேர்தல் களத்தில் இறங்க உள்ளனர்.
கட்டளைக்கு காத்திருப்பு அதிமுகவை பொருத்தவரை அதன் பொதுச் செயலாளரான ஜெயலலிதா தான் சர்வ அதிகாரம் படைத்தவர். தேர்தலுக்கு ஓராண்டு முன்பாகவே அதற்கான பணிகளை தொடங்கிவிடுவது ஜெயலலிதாவின் வழக்கம்.
லோக்சபா தேர்தல் வியூகம் 2014 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. யாரும் எதிர்பாரத வகையில் நாற்பது தொகுதிகளில் போட்டியிட்டது. நாற்பது தொகுதிகளையும் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என, ஓராண்டுக்கு முன்பாகவே, கட்சியினரை உசுப்பி விட்டார் ஜெயலலிதா
வாட்டிய வழக்குகள் சொத்துக்குவிப்பு வழக்கு, சிறை தண்டனை, உடல்,மன வேதனை வேறு முதல்வரை வாட்டி வதைப்பதால் அதிமுக கூடாரம் அமைதியாகவே பணிகளை கவனித்து வருகிறது. ஆனாலும் லோக்சபா தேர்தல் வியூகம் போலவே, 2016 சட்டசபை தேர்தலுக்கும் வியூகம் அமைக்க விரும்புகிறார் முதல்வர்.
உற்சாக ஜெயலலிதா 10 தினங்களுக்குப் பின்னர் கடந்த 15ம் தேதி தலைமைச்செயலகம் வந்த ஜெயலலிதா வழக்கத்தை விட உற்சாகமாகவே காணப்பட்டார். காரணம் உடல் நலக்குறைவு என்று எதிர்கட்சிகள் பரப்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கூடுதல் உற்சாகமாக செயல்பட்டாராம்.
ஏழு பேருக்கு உத்தரவு ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி ஆகிய நால்வருடன் மேலும் 3 அமைச்சர்களை அழைத்து பேசிய ஜெயலலிதா கூடவே சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளாராம்.
நால்வர் அணிக்கு மரியாதை அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் உள்ளனர். அதிமுகவினர் மத்தியில் இந்த நால்வர் அணிக்கு தனி மரியாதையே உண்டு.
கட்சிப்பணியில் மாற்றம் ஆளும் கட்சியான அதிமுகவும் தேர்தலுக்கு தயாராகி வருவதன் முன்னோட்டமாக கட்சியில் சில மாற்றங்களைச் செய்யப்போகிறாராம் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. நால்வர் அணியில் உள்ள அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம் இருவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும் பழனியப்பனுக்குப் பொருளாளர் பதவியும் அ.தி.மு.க-வில் தரப்போவதாக தகவல்கள்கள் வெளியாகியுள்ளன.
மாவட்ட செயலாளர்கள் மாற்றம் தேர்தலுக்கு முன்னதாக எப்படியும்18 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனியர் அமைச்சர்களின் பரிந்துரையின் பேரில் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜெயலலிதா விடம் கொடுக்கப்பட்டு விட்டதாம்.
தொகுதிக்கு போங்க கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், சொந்த தொகுதியில் தங்கியிருந்து, தீவிரமாக மக்கள் பணியாற்ற வேண்டும் என சொல்லியிருக்கும் முதல்வர், இதெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என, உளவுத்துறை போலீசார் கண்காணித்து அறிக்கை தரவும் உத்தரவிட்டிருக்கிறார். இதனால், தமிழகம் முழுவதும் கட்சியினர், இப்போதே, 2016 தேர்தல் பணியில் தீவிரமாகி விட்டனர்.
மாவட்டத்துக்கு போங்க அனைத்து அமைச்சர்களும் வாரம் 2 நாள் தங்களின் சொந்த மாவட்டத்திற்கு போக வேண்டும். நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளதாம்.
தேர்தலுக்கு தயாராகும் ஜெ தன்னுடய உடல்நலன் குறித்து வதந்தி பரப்புவதில் எதிர்கட்சிகள் தீவிரமாக இருப்பதால், அதை முறியடிக்கும் வகையில் முன்னிலும் வேகமாக செயல்பட முடிவெடுத்து விட்டாராம் ஜெயலலிதா. அதனால்தான் தலைமைச்செயலகத்திலேயே எம்.பிக்கள் கூட்டம், அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகுங்கள் என்ற உத்தரவும் போட்டுள்ளாராம் முதல்வர் ஜெயலலிதா.
234ம் நமதே முழக்கம் லோக்சபா தேர்தலில் 'நாற்பதும் நமதே' என்று கோஷம் வைத்து, தேர்தலை சந்தித்தது போல, '234லிலும் நமதே' என்ற முழக்கத்துடன் சட்டசபை தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., தயாராகி வருகிறது என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment