Latest News

இனி குழம்ப வேண்டாம்.. வேட்பாளர் போட்டோ பார்த்து ஓட்டு போடலாம்!


தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதே பெயர் கொண்ட பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்துவது எதிர்கட்சிகளின் தந்திரம். இப்படி பெயர் குழப்பத்தை தவிர்க்க வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படத்தை சேர்த்து அச்சிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அமுல்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வேட்பாளரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும் என்பதால் வாக்காளர்கள் இனி குழப்பம் அடையத் தேவையில்லை.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட உத்தரவு:

மின்னணு வாக்கு எந்திரத்தில் வைக்கப்படும் ஓட்டுச் சீட்டு மற்றும் தபால் வாக்குச் சீட்டுகளில் இதுவரை வேட்பாளருக்கான வரிசை எண், வேட்பாளரின் பெயர், வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவை மட்டும் அச்சிடப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டது. இது வாக்காளர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, இனிமேல் நடக்க இருக்கும் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி. தேர்தலிலும் பயன்படுத்தப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகள், சாதாரண ஓட்டுச் சீட்டுகள், தபால் ஓட்டுச் சீட்டுகள் ஆகியவற்றில் ஏற்கனவே அச்சிடப்படும் விவரங்களுடன் அந்தந்த வேட்பாளர்களின் புகைப் படமும் அச்சிடப்பட வேண்டும்.

எனவே, வேட்புமனு தாக்கலுக்கு முன்பு 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேட்பாளர் கொடுக்க வேண்டும். அந்த புகைப்படத்தின் அகலம் மற்றும் உயரம் முறையே 2 செ.மீ.க்கு 2.5 செ.மீ. ஆக இருக்க வேண்டும். கருப்பு வெள்ளை அல்லது கலர் புகைப்படத்தை வேட்பாளர் கொடுக்கலாம். புகைப்படத்தில் சாதாரண உடையில் நேர் பார்வையில் வேட்பாளர் காணப்பட வேண்டும். சீருடை, கருப்பு கண்ணாடி அணிந்த புகைப்படங்கள் ஏற்கப்படமாட்டாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி இந்த தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களின் புகைப்படமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்படும் வாக்குச் சீட்டில் இடம் பெறுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் குழப்பம் இன்றி ஓட்டு போடலாம். அட இதெல்லாம் எதுக்கு பாஸ் நம்ம ஊர்ல இன்னமும் இரட்டை இலையும், சூரியனை பார்த்துதானே பட்டனை அமுக்குறாங்க... அப்புறம் எதுக்கு போட்டோ? என்று கேட்கிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.