புவனேஸ்வர்: வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கிய டெக்கான் கிரானிக்கிள் குழுமத்தின் துணைத்தலைவர் பி.கே.அய்யர் ஒடிசாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்ட அய்யர் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
"கிட்டதட்ட 357 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள அய்யரை சிபிஐ பலநாட்களாக தேடி வந்தது" என்று அவரைக் கைது செய்த காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். 2 மாதங்களாக அந்த ஹோட்டலில், பொய்யான பெயரில் தங்கி வந்துள்ளார் அய்யர். "பொய்யான பொருளாதார தகவல்களை அளித்து பல்வேறு வங்கிக் கடன்களை கடந்த 2009-2011 ஆம் ஆண்டுகளில் பி.கே.அய்யர் பெற்றுள்ளார்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ட்ரிடெண்ட் ஸ்டார் ஹோட்டலில் 220வது ரூமில் சித்ரா அத்வனி என்ற பெயரில் மே 17 முதல் தங்கி இருந்துள்ளார். புவனேஸ்வருக்கு வருவதற்கு முன்னர், கொல்கத்தா மற்றும் போர்ட் பிளேரில் தங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, டெக்கான் கிரானிக்கிள் குழுமத் தலைவரான திக்கவரப்பு வெங்கட்ராம் ரெட்டி மற்றும் அவரது சகோதரரும், மேனேஜிங் டைரக்டருமான வினாயக் ரவி ரெட்டி ஆகியோர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டனர். கனரா வங்கியில் போலியான ஆவணங்களைச் சமர்பித்து ரூபாய் 357 கோடி ஏமாற்றியதாக இவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment