வரும் 27ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து நீதிபதி குமாரசாமியால் விடுவிக்கப்பட்ட பிறகு முதல்வராக பொறுப்பேற்று கொண்ட ஜெயலலிதா வரும் 27ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார். இத்தேர்தலை திமுக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தா.மா.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு செய்துள்ளன.
ஜெயலலிதாவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரனும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் போட்டியிடுகின்றனர். தேமுதிகவை நம்பி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக போட்டியிடும் என்று அறிவித்தார். ஆனால் தேமுதிக தற்போது பின்வாங்குவதால் பாஜக இன்னும் முடிவு சொல்லாமல் தாமதப்படுத்துகிறது.
இச்சூழலில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் பாரிவேந்தர் ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக கூட்டணியில் யாரேனும் போட்டியிட்டால் அவரை ஆதரிப்போம் என்றும் பாஜக கேட்டுகொண்டால் தமது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார். இச்சூழலில் தேமுதிக பின்வாங்கும் பட்சத்தில் பாஜக சார்பில் பலியாடாக இந்திய ஜனநாயக கட்சி நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.


No comments:
Post a Comment