Latest News

ஆம்பூர் விசாரணைக் கைதி மரணம் - காவல் ஆய்வாளர் மார்ட்டின் சஸ்பென்ட்


வேலூர்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பாக பிரச்சினையில் சிக்கியுள்ள பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்டின் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் பூந்தோட்டம், பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகானின் மகன் ஷமில் அஹமத் (26). கடந்த மாதம் 15ம் தேதி பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரு பெண் காணாமல் போனது தொடர்பாக இவரை பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரணைக்கு அழைத்துச் சென்றார். போலீஸ் விசாரணையின் போது ஷமீலுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஷமீல், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை ஷமீல் உயிரிழந்தார். இதையடுத்து ஷமீலின் மரணத்திற்குக் காரணமாக பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்டினை பணியிடை நீக்கம் செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் பேச்சு நடத்தினார்.


அதனைத் தொடர்ந்து பணியிட மாறுதலில் தற்போது வாணியம்பாடி கலால் ஆய்வாளராகப் பணிபுரியும் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சபாரத்தினம் உள்ளிட்ட 7 பேர் மீது குற்ற நடைமுறைச் சட்டப்பிரிவு 176 (1) கீழ் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மார்ட்டினை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து பல்வேறு முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது வன்முறையாளர்கள் நடத்திய கல்வீச்சில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கே.செந்தில்குமாரி உள்பட 10க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.

இதேபோல் ஆம்பூர் கிராமிய போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து உட்பட காவல் துறையினரின் 2 வாகனங்கள், 5 இரு சக்கர வாகனங்கள், 10 பெட்டிக் கடைகள் ஆகியனவும் எரிக்கப்பட்டன. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் தாக்கப் பட்டனர். அவர்களின் வீடியோ கேமராக்கள், செல்போன்களும் உடைக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து 500-க்கு மேற்பட்ட அதிரடிப்படை போலீஸார் ஆம்பூரிலும் பள்ளிகொண்டாவிலும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர் ஆர்ப்பாட்டங்களின் எதிரொலியாக தற்போது காவல் ஆய்வாளர் மார்ட்டின் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இதற்கிடையே, போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இறந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு, வேலூர் குற்றவியல் நீதிபதி ஏ.மும்மூர்த்திக்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.