பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவை விமர்சித்து பேட்டியளித்த மும்பை எம்.எல்.ஏ.வுக்கு விளக்கம் கேட்டு அக்கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பை கொலாபா பகுதிபாஜக எம்.எல்.ஏ. ராஜ் புரோகித். மராட்டியத்தில் 1995 முதல் 1999-ம் ஆண்டு வரை பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது புரோகித் மாநில அமைச்சராக இருந்தவர். இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை விமர்சித்து பேசிய வீடியோ கடந்த வெள்ளியன்று ஊடகங்களில் வெளியானது.
அந்த வீடியோவில், பாரதீய ஜனதாவில் உட்கட்சி ஜனநாயகம் கிடையாது, மோடியும், ஷாவும் தான் அதிகாரத்தை வைத்து உள்ளனரா என்ற கேள்விக்கு ஆம் என பதிலளித்துள்ளார் புரோகித். மேலும், மத்திய அரசின் கொள்ளை தொடர்பாக அவர் பேசுகையில், ‘மோடி நன்றாக பணியாற்றுகிறார். ஆனால் சில தவறுகளை இனி செய்யக்கூடாது. பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் பாரதீய ஜனதாவிற்கு தீவிர ஆதரவு தரும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்துகிறது. கூட்டுத் தலைமை என்று பேசுகிறார்கள். ஆனால் முழுமையாக கிடையாது. இது கட்சிக்கு ஆபத்தானது. கட்டுமான தொழிலதிபர்கள் உள்பட, மேலிடத்தில் இருந்து வரும் நெருக்கடியை சமாளிக்க வழிதெரியாமல் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் திகைத்து நிற்கிறார். மராட்டியத்தில் ஏக்நாத் கட்சேவுக்கு (கலால் அமைச்சர்) பிறகு கட்சியின் மூத்த தலைவர் என்ற வகையில் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும்' என்று புரோகித் கூறுவதும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
ஆனால், இந்த வீடியோ மார்பிங் செய்யப் பட்டது என புரோகித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ‘நான் உண்மையில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு அளித்து வருகின்றேன். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்பட பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலமையின் மீது எனக்கு முழு நம்பிக்கையும் உள்ளது. நான் அவர்கள் தொடர்பாக எந்தஒரு கருத்தும் தெரிவிக்க மாட்டேன். ஆர்.எஸ்.எஸ். பாதுகாவலர்கள் போன்றது, என்னுடைய கனவில் கூட, நான் குறைகூறியது கிடையாது' என புரோகி த்விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்து பேட்டியளித்ததாக புரோகித்துக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ‘புரோகித் செயல்பாடானது கட்டுப்பாட்டை மீறியதாகும், கட்சியின் தலைமையிடம் மூன்று நாட்களில் பதில்அளிக்க வேண்டும், இதனை தவறும்பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பாஜக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பாஜக அமைச்சர் ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு குற்றச்சாட்டு, சுஷ்மா சுவராஜ் மற்றும் வசுந்தரா ராஜே ஆகியோர் லலித் மோடிக்கு உதவிய விவகாரம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், பாஜக எம்.எல்.ஏ.வே தனது கட்சியை விமர்சித்து இவ்வாறு பேட்டியளித்திருப்பது அக்கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர், ‘பாரதீய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நிலவும் பொதுவான மனநிலையை புரோகித் விவகாரம் பிரதிபலிக்கிறது. புரோகித்தின் மனநிலைதான் பாரதீய ஜனதாவில் பெரும்பாலானோரிடம் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment