ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி அவரது அழகால் தான் பலவற்றை சாதிப்பதாக செய்தி வெளியிட்டு அவுட்லுக் வார இதழ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தெலுங்கானா முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஐஏஸ் அதிகாரி ஒருவர் தனது அழகை வைத்து வேலையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்று அவுட்லுக் வார இதழ் கிசுகிசு வெளியிட்டுள்ளது. அந்த கிசுகிசு செய்தியில், ஐஏஎஸ் அதிகாரியின் அழகு, அவர் உடையணியும் விதம், வேலையில் புரமோஷன் மேல் புரமோஷன் வாங்கியது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி தனது அழகை வைத்து தான் சாதிப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அழகான அதிகாரி அண்மையில் நடந்த ஃபேஷன் ஷோவில் பேண்ட் மற்றும் ப்ரில் வைத்த சட்டை போட்டு வந்து அனைவரையும் அசத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளதுடன் அந்த நிகழ்ச்சி குறித்த கேலிச் சித்திரமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கேலிச்சித்திரத்தில் பெண் அதிகாரி ஒய்யாரமாக நடந்து வர தெலுங்கானா முதல்வர் கையில் கேமராவுடன் அவரையே பார்ப்பது போன்று உள்ளது. பிற அரசியல்வாதிகள் அவரை ஊக்கிவிப்பது போன்று கேலிச்சித்திரம் உள்ளது. அந்த செய்தியில் பெயர் வெளியிடாவிட்டாலும் அவர்கள் தெலுங்கானா முதல்வர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலை பற்றி தான் பேசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மக்களின் அதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்மிதா 1977ம் ஆண்டு பிறந்தவர். 2001ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் 4வது ஆளாக தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு அவர் சித்துார் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் துணை கலெக்டராக பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய பிறகு அவர் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி அவர் தெலுங்கானா முதல்வர் அலுவலக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். முன்னதாக அவுட்லுக் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி செய்தி வெளியி்ட்டு சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அவுட்லுக்கின் கீழ்த்தரமான செய்தியை பல பத்திரிக்கையாளர்கள் கண்டித்துள்ளனர்.
No comments:
Post a Comment