ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இன்று மாலை எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் செவ்வாய்கிழமை, சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரமும் கொண்ட இந்த நாளில் ஜெயலலிதா பதவியேற்க விரும்பாத காரணத்தால் வேறொரு நாளுக்கு பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று நல்ல நாளில் ஜெயலலிதா பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். ரூ.66 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. இதனையடுத்து அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. முதல்வர் பதவியையும் இழந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா. இந்த வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து கடந்த மே மாதம் 11ம் தேதி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இதனையடுத்து கடந்த மே 23ம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார். ஜெயலலிதா 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏவாக பதவியேற்க வேண்டும் என்பதை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு கடந்த 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரின் டெபாசிட்டுகளையும் காலி செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 1,60,921. வாக்கு வித்தியாசம் 1,50,252. இது ஒரு சாதனை வெற்றியாகும். இந்த வெற்றியை அடுத்து ஜெயலலிதா இன்று மாலையே எம்.எல்.ஏவாக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் செவ்வாய்கிழமையான இன்று சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம். இந்த நாளில் ஜெயலலிதா பதவியேற்பாரா? என்றும் சந்தேகம் எழுந்தது. நாள், திதி, நட்சத்திரம் என அனைத்திலும் நல்ல நேரம் பார்த்து முடிவு செய்யும் ஜெயலலிதா, ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். எம்.எல்.ஏவாக பதவியேற்பதிலும் ஜோதிடர்களின் ஆலோசனை பெற்றே செயல்படுவார் எனவே இன்றைய தினம் அவர் பதவியேற்கவில்லை. பதவியேற்பு விழா வேறொரு நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment