திருச்சி அருகே தனியார் அலுமினிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்து சிதறுகின்றன. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அப்பல்லோ மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது ஓ.ஆர்.எஸ் ஸ்டீல் தொழிற்சாலை. தனியாருக்கு சொந்தமான இந்த ஆலையில் நண்பகல் 12 மணியளவில் சிலிண்டர் வெடித்து சிதறி தீ பற்றியது. தீ மளமளவென பரவியது. இதில் தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறின.
காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் அருகில் இருந்த முட்புதரும் தீ பிடித்து எரிந்தது. இதனால் ஆலையில் மேற்கூரையிலும் தீ பற்றியது. கொழுந்து விட்டு எரிந்த தீயினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
சிலிண்டர் வெடித்து சிதறுவதோடு தீயின் உக்கிரத்தால் புகை மண்டலமும் அதிகரித்துள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment