மயிலாடுதுறை: முஸ்லீம் மாணவிகள் பர்தா போடுவதால், அவர்கள் தேர்வுகளில் காப்பி அடிக்க, பிட் அடிக்க எளிதாக இருக்கிறது என்று கருத்துக் கூறியுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. எச்.ராஜாவுக்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் செம்பனார்கோவிலுக்கு செல்லும் வழியில் நேற்று மயிலாடுதுறைக்கு வந்தார் எச்.ராஜா. அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த மாதம் காவிரியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால், தண்ணீர் வரத்து இல்லாததால் திறக்க முடியவில்லை. 50 ஆண்டு கால காவிரி ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், 1974ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகா அரசோடு ஒப்பந்தத்தை புதுப்பித்து இருக்க வேண்டும். அதனை அப்போதைய திமுக அரசு செய்யவில்லை. தமிழகத்துக்கு 234 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் போட்ட மனுவையும் திமுக வாபஸ் வாங்கி தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது. எனவே அவர்களை ஆட்சியில் அமர வைக்கக்கூடாது. பாஜக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையுமானால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். 1967ம் ஆண்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும் முன்பு தமிழகம் பொருளாதாரத்தில் 2வது இடத்தில் முன்னேறி இருந்தது. ஆனால், இன்று பொருளாதாரத்தில் பல அடிகள் பின்நோக்கி சென்றுவிட்டது. இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் உள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் கடந்த ஆண்டு மட்டும் 1,500 அரசு பள்ளிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் சுமார் 2 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் இஸ்லாமிய மாணவிகளும் பர்தா அணிகிறார்கள். இதைத் தடை செய்ய வேண்டும். இது மாணவிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தவே வழி வகுக்கும். அதுமட்டுமல்லாமல், தேர்வுகளில் பிட் அடிக்க, காப்ப அடிக்கவும் இது வழி வகை செய்து விடும். எனவே பர்தா அணிவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று கூறியிருந்தார். மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் ராஜாவின் இந்தப் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சித் தலைவரும், ராமநாதபுரம் தொகுதி சட்டசபை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் எச். ராஜா, தமிழக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதை தடைச் செய்ய வேண்டும் என்றும், பர்தா அணிந்து வருவதால், தேர்வுகளில் பிட் அடிப்பது எளிதாக இருக்கும், பர்தா மக்களை ஒன்றினைக்காமல் பிரிவனை எண்ணத்தை உருவாக்கும் என்று வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.
எச்.ராஜாவின் இந்த விஷமக் கருத்தை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரு அடிப்படைக் கடமையாகும். இந்திய அரசியமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்கள் தாங்கள் விரும்பும் எந்த ஒரு மதத்தையும் கடைப்பிடிக்கவும்; நடைமுறைப்படுத்தவும்; பிரச்சாரம் செய்யவும் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் இந்திய முஸ்லிம்கள் தங்களது மதக் கோட்பாட்டின்படி தலையில் தொப்பியும், முகத்தில் தாடியும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவர முழுமையாக உரிமைப் பெற்றுள்ளனர். இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமையை இழிவுபடுத்தி எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பர்தா அணிந்து தேர்வுகளில் பிட் அடித்ததாக எந்த ஒரு மாணவி மீதும் இதுவரை புகார் எழவில்லை. தொடர்ந்து வேண்டுமென்றே முஸ்லிம் சிறுபான்மையினர் மீது விஷமக் கருத்துகளைத் தெரிவிப்பதே எச். ராஜாவின் முழுநேர வேலையாகி உள்ளது. ராமநாதபுரம், எஸ்.பி. பட்டிணத்தில் சார்பு ஆய்வாளர் காளிதாஸால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முஹம்மது என்பவர் ரவுடி என்றும் ரவுடிக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது என்றும் பல ஆதாரமற்ற பொய் பேச்சுகளை தமிழகத்தில் பேசி வந்தவர் தான் இந்த எச்.ராஜா. தற்போது அக்கொலை குறித்து நடைபெற்ற குற்றவியல் நடுவர் மற்றும் சிபிசிஐடி விசாரணையிலும் அது கொலை என்பது நிரூபணமாகி காளிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை தொடர்ந்து பேசி தமிழகத்தில் நிலவி வரும் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுகொள்கிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment