அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுகவெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மெய்யூர் என்ற கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார் கனிமொழி. எம்.பிக்கள் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் இதை அவர் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சி மெய்யூரில் நடந்தது. அதில் கலந்த கொண்டு அவர் பேசியதாவது:
எம்.பி. நிதி என்று எம்.பி.க்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியில் இருந்து நாங்கள் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அந்த கிராமத்துக்கு பொதுவாக செய்து தரவேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்ற ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலே ஸ்ரீவெங்கடேஸ்வராபுரம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தேன். அந்த கிராமத்திலே பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மெய்யூர் கிராமத்தைத் தத்தெடுக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. என்னால் இந்த கிராமத்துக்கு என்னென்ன செய்து தர முடியுமோ அத்தனையும் செய்து தருவேன்.
பசுமை வீடுகள் கட்டித் தரவேண்டும் என்றும்- ஓ.ஏ.பி. எனப்படும் முதியோர் ஓய்வூதியத் தொகை சரிவர வருவதில்லை என்றும் தான் அதிக அளவில் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் இரண்டுமே மாநில அரசின் கையில் இருப்பவை. அதனால் இந்த ஆண்டு என்னால் அதைச் செய்து தர இயலாது. ஆனால் அடுத்த ஆண்டு அதை செய்து தரக்கூடிய நிலையிலே நீங்கள் எங்களை வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்து திமுக ஆட்சிதான் உறுதியாக அமையும். அந்த ஆட்சியில் இந்த பகுதிக்கு அமைச்சராக பொறுப்பேற்பவரிடம் சொல்லி பசுமை வீடுகள்- ஓ.ஏ.பி. ஆகிய திட்டங்களை உங்களுக்கு உறுதியாகப் பெற்றுத் தருகிறேன். யாரும் ஒதுக்கப்பட மாட்டார்கள்- ஒடுக்கப்படமாட்டார்கள். அனைவருக்கும் ஓ.ஏ.பி. நிச்சயமாக வந்து சேரும். அதற்கு முதற்படியாகத் தான் எம்.பி. என்ற முறையில் இந்த கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன் என்றார் கனிமொழி.
No comments:
Post a Comment