ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூடிய விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் கடந்த மாதம் 11 ஆம் தேதி விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் வலியுறுத்தினர். இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. தீர்ப்பு வந்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். தற்போது தீர்ப்பு வந்து 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, அப்பீலுக்கு செல்ல தயாராகிவிட்டது கர்நாடக தரப்பு. இருப்பினும் இது அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவும் கிடையாது. மேல்முறையீடு முடிவை எடுக்கும் முன்பு, கர்நாடக அரசு பல சுற்று ஆலோசனைகளை நடத்தியது. தற்போது ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், மேல்முறையீடு செய்ய ஆளுநரின் அனுமதி வேண்டுமா மற்றும், மேல்முறையீட்டின்போது அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெற வேண்டுமா ஆகிய இரு சந்தேகங்களை கர்நாடக சட்டத்துறை அமைச்சகம், அதன் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரிடம் கேட்டிருந்தது.
அவர் கடந்த வெள்ளிக்கிழமை அரசுக்கு அளித்த அறிக்கையில், ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டுக்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை, மேலும், சிறப்பு வழக்கறிஞரை கர்நாடகாவே தன்னிச்சையாக நியமிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று தெளிவுபடுத்தியிருந்தார். மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால், உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தது போலாகிவிடும் என்றும், நீதியை கேலிக்கூத்தாகுவதை போலாகிவிடும் என்றும் எச்சரித்திருந்தார். எனவே உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ரவிவர்மகுமார் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை இன்று இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா "ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்ய மேலிடத்திடமிருந்து எந்த நெருக்கடியும் வரவில்லை. இதில் அரசியல் காரணங்களும் கிடையாது. கூடிய விரைவிலேயே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும்" என்றார். இந்த வார இறுதிக்குள்ளாக, உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு முன்னிலையில், கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலுவான பாயிண்டுகளுடன் கூடிய மேல்முறையீடு மனு தயாராகிவருவதாகவும் அத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
No comments:
Post a Comment