பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில், பிடிபட்ட புறாவின் இறகில் பாகிஸ்தான் மாவட்டத்தின் பெயர் முத்திரை மற்றும் உருது எழுத்துகள் பதிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் சினிமா பாணியில், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பினர் உளவு பார்க்க புறாவை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதாக மத்திய உளவுத்துறை இந்த வாரத் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த புறா அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதன் கோட் அருகில் உள்ள மன்வால் என்ற கிராமத்தில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புறா வந்து இறங்கியது. அந்த புறாவின் இறகுகளில் எழுத்துக்கள் இருப்பதை ரமேஷ்சந்திரா பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக அவர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உடனே அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பதன்கோட் போலீசார் ரமேஷ்சந்திரா வீட்டுக்கு சென்று அந்தப் புறாவைப் பிடித்தனர். வெள்ளை நிறம் கொண்ட அந்தப் புறாவின் இறகுகளில், உருது மற்றும் ஆங்கிலத்தில் வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தன. மேலும் புறாவின் ஒரு இறக்குக்குள் செல்போன் நம்பர் ஒன்றும் எழுதப்பட்டு இருந்தது.
அந்த நம்பர் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவல் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த புறாவை போலீசார் ஸ்கேன் செய்து பார்த்தனர். ஆனால் அதன் முடிவு வெளியிடப்படவில்லை. புறா உடலுக்குள் ரகசிய கருவிகள் வைத்து அனுப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த புறாவை காஷ்மீரில் உள்ள தங்கள் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் வனப்பகுதிக்குள் செல்வத்திற்குப் பதில் அந்த புறா வழி தவறி பதான் கோட் வந்து விட்டதாக தெரிகிறது. பதன் கோட் போலீசார் அந்தப் புறாவைத் தாங்கள் பொறுப்பில் வைத்துள்ளனர். புறா மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உளவு பார்த்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பதன்கோட் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் கவுசல், "இந்த முத்திரை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே அந்தப் புறாவை பரிசோதித்து வருகிறோம் என்றார். உளவுத்துறை, எல்லைப்பாதுகாப்புப் படை உட்பட பாதுகாப்பு படையினரை இது தொடர்பாக உஷார்படுத்தியுள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார். குர்தாஸ்புரில் உள்ள மருத்துவமனையில், அந்தப் புறா ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதன் உடலில் எங்கேனும் கேமரா அல்லது வேறு பொருட்கள் உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டது. ஆனால், எதுவும் அகப்படவில்லை. புறாவின் இறகுகளில் உள்ள எண்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
பிடிபடும் பறவைகள்
கடந்த மார்ச் மாதம், குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் ஒரு காலில் "சிப்', மற்றொரு காலில் சங்கேத குறியீடு, எண்களுடன் ஒரு சிறு வளையம் ஆகியவற்றுடன் ஒரு புறா பிடிபட்டது. அதன் இறகில், அரபி மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு வல்லூறு சிறு கேமராவுடன் இறந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டது. 2010-ம் ஆண்டு புறா ஒன்று பிடித்து பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment