மத்திய அரசு 3வது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நேற்று இந்த பிரகடனத்தை மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது இன்று அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான மசோதாவை மத்திய அரசால் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து அடுத்தடுத்து அது அவசரச் சட்டத்தை பிரயோகித்து வருகிறது.
உண்மையில் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். 2013ம் ஆண்டில், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில், குறைபாடுகள் இருப்பதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர்.
இதைத் தொடர்ந்து தற்போதைய மோடி அரசு அதில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. ஆனால் அதை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறது. லோக்சபாவில் மசோதா நிறைவேறி விட்டது. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து அவசரச் சட்டமாக இதை மத்திய அரசு அமல்படுத்தியது. இதேபோல 2 முறை அமல்படுத்தியது. தற்போது 3வது முறையாக அவசரச் சட்டமாக கொண்டு வந்துள்ளது. இன்று இந்த அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தது.
No comments:
Post a Comment