மாயமான டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த கடலோர காவல்படையினர் 3 பேரும் அதற்குள் தான் சிக்கியிருக்க வேண்டும் என கடலோர காவல்படை ஐஜி எஸ்.பி. சர்மா தெரிவித்துள்ளார். கடந்த 8ம் தேதி மாலை சென்னையில் இருந்து பாக் ஜலசந்திக்கு ரோந்து பணிக்கு சென்ற கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் அன்று இரவு நாகை அருகே மாயமானது. விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.
விமானம் மாயமாகி இத்தனை நாட்களாகியும் அது கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து கடலோர காவல்படை ஐஜி எஸ்.பி. சர்மா கூறுகையில், கடலோர காவல்படை வீரர்கள் 3 பேரும் மாயமான டோர்னியர் விமானத்திற்குள் தான் சிக்கியிருக்க வேண்டும். கடலின் ஆழத்தில் விமானம் கிடப்பதால் அதில் இருந்து வரும் சிக்னலை கண்டுபிடிப்பதில் பிரச்சனையாக உள்ளது என்றார். விமானத்தில் சென்ற 3 பேரும் உயிருடன் இருக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவர்களின் குடும்பத்தார்.
No comments:
Post a Comment