மகாராஷ்டிராவில் குடும்ப சண்டையில் மாமியாரின் மூக்கை அறுத்துக் கொலை செய்த மருமகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு பிரகதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (55). இவரது மருமகள் சாந்தினி (28). சாந்தினிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களாகவே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மோதல் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாந்தினி சமையல் அறையில் இருந்த கத்தியால் மாமியாரின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஊர்மிளாவை வீட்டிற்குள் வைத்து விட்டு, வீட்டை வெளியில் உலாவியுள்ளார். ரத்தம் படிந்த கையுடன் அவரைப் பா்த்த அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர். இதையடுத்து தனது உறவினர் வீட்டுக்குப் போய் விட்டார் சாந்தினி. சாந்தினியின் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரிடம் விசாரித்துள்ளனர். முதலில் தனக்கு கர்ப்பம் கலைந்து விட்டதாக கூறியுள்ளார் அவர். ஆனால் அவர்கள் நம்பவில்லை. அதன் பின்னரே உண்மையைக் கூறியுள்ளார்.
உடனடியாக சாந்தினியின் வீட்டிற்குச் சென்ற உறவினர்கள், ஊர்மிளாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஊர்மிளா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சாந்தினியைக் கைது செய்தனர். சாந்தினியின் மாமியாருக்கு ஓம் பிரகாஷ், ஜெயப்பிரகாஷ் என மொத்தம் 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன்தான் சாந்தியினின் கணவர் ஆவார். சம்பவத்தின்போது அவர் அலுவலகத்தில் இருந்துள்ளார்.
No comments:
Post a Comment