மன உளைச்சல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறை பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரை இன்னொரு ஆண் ஊழியருடன் இணைத்து அவதூறு கடிதம் எழுதி அனுப்பிய ஆண் ஊழியரே காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் லட்சுமி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி திலகவதி (32). பிச்சம்பாளையம்புதூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த திலகவதி, கடந்த 14ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக திலகவதியின் உறவினர்கள் போலீசில் அளித்த புகாரில், அதிகாரிகளின் பணி நெருக்கடி மற்றும் உடன் வேலை செய்யும் பணியாளர்களின் தொந்தரவு காரணமாகவே திலகவதி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திலகவதி குறித்து அவதூறாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மொட்டை கடிதம் அனுப்பப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தக் கடிதத்தில் அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபருக்கும், திலகவதிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்துவதற்காக திலகவதியை உயர் அதிகாரிகள் அழைத் திருந்தனர். இந்த நிலையில், தன் மீதான பொய் புகாரால் மனம் உடைந்த திலகவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் கடிதத்தை எழுதியது அதே அலுவலகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து திலகவதியை தற்கொலைக்கு தூண்டியதாக ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ், பின்னர் கோவை நடுவன் சிறையில் அடைக்கப் பட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment