ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பதவியை இழந்தபோது தொகுதி காலி என அறிவிக்க பல மாதங்களை எடுத்துக் கொண்ட தமிழக சட்டசபை செயலகம், தற்போது வெற்றிவேல் ராஜினாமாவை மட்டுமே படு வேகமாக ஏற்று, தொகுதி காலி என்றும் மின்னல் வேகத்தில் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் விவகாரத்திலும், ஆர்.கே.நகர் விவகாரத்திலும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் காணப்படுகிறது.
2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்து 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அவரது எம்.எல்.ஏ பதவியும், முதல்வர் பதவியும் தானாகவே காலியாகி விட்டது. ஆனால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாகி விட்டதாக சட்டசபை சபாநாயகரும், சட்டசபை செயலகமும் அறிவிக்கவில்லை. ஒரு தொகுதி காலியாகி விட்டால் உடனடியாக அதை தேர்தல் ஆணையத்திற்கு உரிய அறிவிக்கை மூலம் சட்டசபை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். ஆனால் ஸ்ரீரங்கம் விவகாரத்தில் இது பெரும் தாமதத்துக்குள்ளானது.
அதாவது நவம்பர் 8ம் தேதிதான் இதுதொடரபான முறைப்படியான அறிவிக்கையை சபாநாயகர் தனபால் வெளியிட்டார். சபாநாயகரின் இந்த தாமதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தத் தாமதத்தைக் கண்டித்திருந்தன. இந்த நிலையில் இதற்கு நேர் மாறான ஒரு செயல் இன்று நடந்தது. ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா என்று தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அதை சபாநாயகர் ஏற்றதாகவும் தொகுதி காலியாகி விட்டதாக அவர் அறிவித்துள்ளதாகவும் சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார்.
No comments:
Post a Comment