தன் மீதான அன்பையும், விசுவாசத்தையும் உணர்ச்சி வயப்பட்ட செயல்களில் காட்ட வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, சிறையில் அடைக்கப் பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. விரைவில் அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.இதற்கிடையே, ஜெயலலிதாவின் தீர்ப்பைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் பலர் துயரத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
''என் உயிரினும் மேலான தொண்டர்கள் என் மீது கொண்டுள்ள அன்பும், அக்கறையும் ஈடு இணையற்றவை. எனக்கு சிறு இன்னல் ஏற்பட்டாலும் தாங்கிக்கொள்ள முடியாத உயர்ந்த அன்பினை என் மீது தொண்டர்கள் அனைவருமே காட்டி வருகின்றனர். அத்தகைய அன்பின் வெளிப்பாட்டில் சில நேரங்களில் தொண்டர்கள் நான் மிகவும் மனம் வருந்தும் வகையில் உணர்ச்சிவயப்பட்ட சில செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகர 21-வது வார்டை சேர்ந்த தொண்டர் சலீம் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். தொண்டர்கள் தங்களுடைய அன்பையும், விசுவாசத்தையும் உணர்ச்சிவயப்பட்ட செயல்களில் காட்ட வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். சலீமை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கிறேன். மேலும் அவர்களது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment