டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நடந்து வரும் நிலையில், யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேவைப்பட்டால்தான் அவர் முதல்வரின் கருத்தை கேட்டறியலாம் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் முதலமைச்சர்-துணை நிலை ஆளுநர் இடையே யார் அதிக அதிகாரம்படைத்தவர்கள் என்று மோதல் நிலவிவருகிறது.
டெல்லியில் சட்டதிட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மேலும் அது யூனியன் பிரதேசமும் கூட. ஆனால், கெஜ்ரிவால், முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது என்று புது குண்டை தூக்கி போட்டார். ஆனால், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிக்கையில், முதல்வரைவிட, யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்களே அதிக அதிகாரம்படைத்தவர்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. தேவைப்பட்டால் துணை நிலை ஆளுநர் முதல்வரோடு கலந்தாலோசிக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிகாரிகளை நியமிப்பதில் பெரியளவில் பண பரிமாற்றம் உள்ளதாக அந்த கட்சியின் தலைவர்களின் ஒருவரும் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் உயர் அதிகாரிகளை நியமிப்பது மற்றும் பணி மாறுதல் செய்வதில் பெரிய அளவில் பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே தான் உயர் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தன்வசம் வைத்துக்கொண்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே முதன்மை செயலர் உட்பட அனைத்து துறை செயலர்களின் கூட்டத்தையும் இன்று அவர் கூட்டியுள்ளார்.
No comments:
Post a Comment