தமிழகத்தின் முதல்வராக மீண்டும் மே 23-ந் தேதியன்று ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, ஆந்திரா, ஒடிஷா மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வராக மீண்டும் பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்டு வந்தார். இதன் முதல் கட்டமாக மே 22-ந் தேதி காலை 7 மணிக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை யில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சட்டசபை அ.தி.மு.க. தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வார். அவரது விலகல் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் ஆளுநர் ரோசய்யா ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுப்பார். ஆளுநர் அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பார். இந்த விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. இக் கூட்டத்தில் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், தலைமை செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் ஜித்தேந்திரநாத், போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 22 மற்றும் 23-ந்தேதிகளில் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆய்வு நடந்தது. ஜெயலலிதா 23-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா அன்று காலை 11 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்ட பத்தில் நடைபெற உள்ளது. ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணமும் ரகசியம் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கும். மொத்தம் 32 அமைச்சர்கள் ஜெயலலிதாவுடன் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் புதிய அமைச்சர்கள் எனவும் கூறப்படுகிறது. இப்பதவியேற்பு விழாவில் அருண்ஜேட்லி உட்பட மூத்த மத்திய அமைச்சர்கள் சிலர் கலந்து கொள்கின்றனர். மேலும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உள்பட பிற மாநிலங்களை பல்வேறு கட்சியினரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment