ஜெர்மன்விங்ஸ் விமானத்தை துணை விமானி வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கியது வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது. ஸ்பெயினில் இருந்து ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு 150 பேருடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானத்தை துணை விமானி லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கியது விமானத்தின் முதல் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் லுபிட்ஸ் மன அழுத்தம், கண் பார்வை கோளாறால் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலை செய்வது பற்றி இணையதளத்தில் ஆய்வு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்து கிடைத்த தகவல்களும் லுபிட்ஸ் வேண்டும் என்றே விமானத்தை மலை மீது மோதியதை உறுதி செய்துள்ளது. லுபிட்ஸ் ஆட்டோ பைலட்டை பயன்படுத்தி விமானத்தை கீழே இறங்க வைத்துள்ளார். விமானம் தரை நோக்கி செல்கையில் அவர் பலமுறை ஆட்டோ பைலட்டை மாற்றியமைத்து விமானத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment