காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில், தினமும் ஆயிரத்து 400 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கர்நாடகம் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை கர்நாடகாவில் அம்மாநில சிறுபாசனத்துறை அமைச்சர் ஷிவராங் தங்கடசி தெரிவித்துள்ளார். அதாவது பெங்களூருவில் தினசரி பயன்படுத்தப்படும் ஆயிரத்து 950 மில்லியன் லிட்டர் தண்ணீரில் சுமார் 60 சதவிகிதம், அதாவது 889 மில்லியன் லிட்டர் கழிவுநீர், பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் வழியாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களை அடைகிறது.
மீதமுள்ள 40 சதவிகித கழிவுநீர், அர்காவதி மற்றும் காவிரி கிளை நதிகள் மூலம் தமிழகத்தை அடைகிறது. இதில் 5 சதவிகிதம் ஆவியாகி விட்டாலும், தோராயமாக ஆயிரத்து 482 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தமிழகத்தை அடைவதாக அம்மாநில சிறுபாசனத்துறை அமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கழிவுநீரின் சிறுபகுதியை சுத்திக்கரித்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கோலார் மற்றும் சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் உள்ள 134 ஏரிகளை நிரம்பி, அந்த பகுதியின் நீர்வளத்தையும், நில வளத்தையும் பெருக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பெங்களூருவில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து தினமும் வெளியேறும் கழிவுநீர், கால்வாய்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, காவிரி மற்றும் சிற்றாறுகள் வழியாக, தமிழகத்திற்கு அனுப்பப்படுவது தெளிவாகி உள்ளது.
No comments:
Post a Comment