தூத்துக்குடியில், ஜாதி மோதல்களால், கொலைகள் அதிகரித்து, ரத்த பூமியாக காட்சியளிப்பதால், அந்த மாவட்ட மக்கள், வீடுகளை விற்று வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில், மணல் கடத்தல், குடும்பத் தகராறு, கள்ளத் தொடர்பு, ஜாதி மோதல், தேர்தல் நேர பகை, அரசியல் ரீதியான முன் விரோதம் போன்ற காரணங்களால், தினசரி ஒரு கொலையாவது நடந்து விடுகிறது. இதுபோன்று, கடந்த, 11 மாதங்களில், 90 கொலைகள் நடந்துள்ளன. மேலும், பேருந்துக்கு தீ வைத்தல், தலைவர்களின் சிலைகளை உடைத்தல் போன்ற சம்பவங்களில், திடீர் கலவரம் வெடிப்பதால், வெளியில் சென்று, உயிருடன் வீடு திரும்பினால் தான் நிச்சயம் என்ற நிலை, அம்மாவட்ட மக்களை வாட்டி வதைக்கிறது.
ரவுடிகள் சாம்ராஜ்யம்:
காவல் துறை கணக்குப்படி, தமிழகத்தில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளில், நெல்லை, தூத்துக்குடியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள், புதிதாக உருவெடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறி விட்ட நெல்லை, தூத்துக்குடியில், 9 எம்.எம்., பிஸ்டல் எனப்படும் கை துப்பாக்கி புழக்கமும் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், வெட்டு, குத்து என்ற நிலை மாறி, துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரிக்குமோ என, போலீஸ் அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்.
பெண்கள் பீதி:
நெல்லை, தூத்துக்குடி மக்களின் தற்போதைய வாழ்வியல் நிலை குறித்து, ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: நெல்லையில், தாழையூத்து, நாங்குநேரி, வள்ளியூர், சேரன் மகாதேவி, தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் பகுதிகள். தூத்துக்குடியில், விளாத் திக்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி புறநகர், கோவில்பட்டி, சாத்தான்குளம், மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் மக்கள், மாலை நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறவே பயப்படுகின்றனர். அந்த நேரத்தில், பெண்கள் மளிகை கடைக்கு போக கூட தயங்குகின்றனர். இந்த பகுதிகளில், ஜாதி மோதல் கொலைகள் அதிகரித்து வருவதால், வீடுகளை விற்று, கோவை, திருப்பூர், திருச்சி, சென்னை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment