மனிதனது வாழ்வில் மகிழ்வைத்தொலைத்து மனநிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.
அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவைகள்யாவும் நடைமுறை வாழ்வில் நிகழக் கூடிய சந்தேகங்களேயாகும்.
உதாரணமாகச் சொல்வதாயின் வீட்டைப் பூட்டிவிட்டோமா.? சமையல் கேஸை ஆஃப் செய்தோமா.? பாக்கிப் பணம் திரும்பப் பெற்றோமா..? அல்லது வெளியில் செல்லும்போதோ, பயணத்திலோ, அலுவலகப்பணியிலோ, ஏதாவது ஒருபொருளை எடுத்துவர மறந்துவிட்டு கொண்டுவந்தோமா..? இல்லையா.? என்று சந்தேகப்படுவது அடுத்துச் சொல்வதானால் சந்தேகநிலையில் உள்ள சில அறியாத விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வது, ஆதார மில்லாத சில செய்திகளை கேள்விப்படும்போது சந்தேகத்தோரனையில் கேட்பது இதுபோன்ற இப்படி பலவகையில் ஒருமனிதனுக்கு நடைமுறை வாழ்வில் அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு.
ஆனால் சிலரது சந்தேகங்கள் அவசியமற்றதாக நின்றாலும் குற்றம், நடந்தாலும் குற்றம், பார்த்தாலும் குற்றம்,பேசினாலும் குற்றம் என்று சொல்வதுபோல சாதா எல்லாவற்றிற்கும் எல்லா விசயத்திற்கும் சந்தேகப்படுவது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்பவாழ்வில் திருமண வாழ்வில் ஏற்ப்படும் சந்தேகம்தான் எல்லா சந்தேகங்கங்களை விடவும் மிக மோசமானவையாகவும் பிரச்சனைக் குரியவையாகவும் இருக்கிறது.இந்த சந்தேகம்தான் நிம்மதியைத் தொலைக்கச் செய்து விடுகிறது. இச்சந்தேகம் கொண்டவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக தெரியவில்லை.
சந்தேகம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் குணங்களில் ஒன்றாக இருந்தாலும் . அதேசமயம் சூழ்நிலையைப் பொறுத்து ஏற்ப்படக் கூடியவையாக இருக்கிறது. இப்படி சூழ்நிலைச் சந்தேகங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து அதிகபட்சம் ஏற்றுக்கொள்ள கூடியவைகளாகவும் இருக்கிறது. அர்த்தமுள்ள சந்தேகங்கள் ஆரோக்கியமானதே அதேசமயம். அர்த்தமில்லா அவசியமற்ற சந்தேகங்கள் சந்தோசத்தை தொலைத்து சங்கடத்தை ஏற்ப்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.
ஒருவருக்கு அவசியமற்ற சந்தேகங்கள் சதா எந்நேரமும் மனதைவிட்டு மாறாமல் இருக்குமானால் எதற்க்கெடுத்தாலும் சந்தேகக் கண்களால் பார்த்துப்பழகி அதுவே ஆட்கொள்ளத்தொடங்கி விட்டால் அதுவே நாளடைவில் மனநோயாளியாகக்கூட மாறிவிட வாய்ப்பாகிவிடுகிறது.
ஆகவே பெற்றோர்களானாலும், கணவன் மனைவி, பிள்ளைகளானாலும், சகோதர,சகோதரி உறவினார்கள் மற்றும் நட்புக்களானாலும் புரிந்துணர்வு மிகமிக அவசியம் இருக்கவேண்டும். ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.நம்பிக்கை தளர்ந்து வலுவிழந்து விடுமாயின் அந்த இடத்தை சந்தேக நோய் தான் ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு பிரச்சனைகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.
தேவையற்ற சந்தேகத்தினால் எத்தனையோ கணவன் மனைவிமார்களும், குடும்பங்களும், உறவுகளும் நட்புக்களும் சிதறுண்டு நாலாப்புறமும் பிரிந்து கிடப்பதை நாம் இவ்வுலகில் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம் பல ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிகிறோம். இப்படி அவசியமற்ற சந்தேகத்தினால் ஏற்ப்படும் பிரிவுகளை நினைக்கும்போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.
குடும்பப் பிரச்சனையில் ஏற்ப்படும் சந்தேகங்கள் கணவன்மனைவிக்குள் ஏற்ப்படும் கருத்துவேறுபாடுகளினால் சந்தேகங்கள் நாளடைவில் பெரிதாகி வளர்ந்து காரணத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் சந்தேகத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அநியாயத்திற்கு தன்னை மாய்த்துக் கொண்டவர்களும் நிறையபேர் உண்டு.
மற்ற சந்தேகங்களை விட ஒருமனிதனுக்கு குடும்ப உறவில் சந்தேகம் வந்து விட்டால் அவனிடம் எவ்வளவு செல்வமிருந்தாலும் பணிவிடை செய்ய ஆயிரம் உதவியாளர்கள் இருந்தாலும் மனதில் நிம்மதிமட்டும் இருப்பதில்லை.. நிம்மதியில்லாத வாழ்க்கை நரகவேதனைக்குச் சமம் என்றுதான் சொல்லமுடியும்.நம்பிக்கைதான் வாழ்க்கை இதை நன்கு உணர்ந்தவர்கள் இன்புற்று வாழ்வார்கள். இல்லையேல் துன்பத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடைபிணமாகத்தான் வாழமுடியும். ஆகவே அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருவதில்லை என்பதை உணர்ந்து அவசியமற்ற சந்தேகங்களை தவிர்த்துக் கொண்டு தமது இவ்வுலக வாழ்க்கையை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்வோமாக...!!!
No comments:
Post a Comment