உடன்குடி மின்திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
“உடன்குடி மின் திட்டத்தை தாமதித்ததற்கும் ரத்து செய்ததற்கும்; விசாரணைக் கமிஷன் அமைக்கத் தயாரா?” என தலைப்பிட்டு திமுக. தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை 18.3.2015 அன்று வெளியிட்டுள்ளார். முன்னுக்கு பின் முரணாகவும், பொய்யான தகவல்களைக் கொண்டதாகவும், ஒரு நாளிதழில் கற்பனையாக வெளியிடப்பட்ட செய்தியின் அடிப்படையிலும், அந்த அறிக்கையை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
2006 முதல் 2011 வரையிலான முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் வெறும் 206 மெகாவாட் மின் நிறுவு திறன் மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டு, இருள் சூழ்ந்த தமிழகமாக தமிழகத்தை இருண்ட காலத்திற்கு கொண்டு சென்ற கருணாநிதிக்கு மின்சாரம் பற்றி எதையும் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை.
தமிழகத்தின் மின் நிலைமையை சீரழித்த கருணாநிதி உடன்குடி மின்திட்டம் நிறைவேற்றப்படுவதில் ஏற்படும் கால தாமதம் தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது என்று அங்காலய்த்திருப்பது ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.
தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் 4,640 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்தவர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு எவ்வித தங்கு தடையுமின்றி அம்மாவின் அரசால் மின் விநியோகம் செய்யப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி, இந்த அரசின் மீது அபாண்டமாக பழி சுமத்துவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையின் முதல் பத்தியில் கருணாநிதி, உடன்குடி மின்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22.2.2009 அன்று ‘உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.
கருணாநிதி கூறியுள்ள தகவல்களில் அடிக்கல் நாட்டு விழா பற்றிய தகவல் மட்டுமே உண்மை. நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பதும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டது என்பதும் வடிகட்டிய பொய்.
அதனால் தான், தனது அறிக்கையின் மூன்றாவது பத்தியில் கருணாநிதி உடன்குடி மின் திட்டத்திற்கான டெண்டர் விடும் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன என்றும் இந்த மின் நிலையத்திற்காக திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மின் வாரியத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டது என்றும், தனியாருக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி முதல் பத்தியில் கூறியுள்ளது போல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன என்றால், 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் எதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும்?
உடன்குடி அனல்மின் திட்டம் அமைப்பதற்காக பாரத மிகுமின் நிறுவனமும், தமிழ்நாடு மின் வாரியமும், 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உடன்குடி மின் கழகம் என்னும் நிறுவனம் 26.12.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியின் இறுதி வரை, அதாவது, 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரை, ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் உடன்குடி திட்டம் தொடர்பாக எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக தனது சொந்த நலன்களுக்காக பாடுபட்டதே தவிர, தமிழக மக்களின் நலன்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அதனால் தான், இத்திட்டத்திற்கான நீண்ட கால நிலக்கரி ஒதுக்கீடு முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் பெறப்படவில்லை; இத்திட்டத்திற்கான மைய அரசின் சுற்றுசூழல் அனுமதியும் பெறப்படவில்லை. உடன்குடி மின் கழக நிறுவனத்திற்குரிய 48 விழுக்காடு பங்குத்தொகை அளிக்கக்கூடிய நிதி நிறுவனமும் அறியப்பட வில்லை.
இவ்வாறு, உடன்குடி மின் திட்டம் துவங்கப்படுவதற்கான எந்தவித பணிகளையும் செய்யாமல், அடிக்கல்லை மட்டும் நாட்டிவிட்டு இந்த மின் உற்பத்தி திட்டம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கருணாநிதி சொல்லுவது எத்தகைய பித்தலாட்டம்? நான்கு ஆண்டுகள் இந்த திட்டத்திற்கு எந்தப் பணியையும் செய்யாமல், கருணாநிதி ஏன் காலதாமதம் செய்தார் என்று இப்போது தான் அவரது அறிக்கையின் மூலம் விளங்குகிறது.
தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவதற்காகவே, அவ்வாறு எந்தப் பணியையும் கருணாநிதியின் முந்தையை மைனாரிட்டி திமுக அரசு செய்யவில்லை போலும்! ‘தான் திருடி, பிறரை நம்பாள்’ என்பதைப் போல கருணாநிதி தற்போது இந்த திட்டத்தின் காலதாமதம் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காகவே என தன்னைப் போலவே பிறரையும் நினைத்துக் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளின் பயனாக, மின் வெட்டே இல்லாத நிலையை எய்தி மின் மிகை மாநிலம் என்ற பெருமையை தமிழகம் அடையும் நிலையை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உடன்குடி மின் திட்டம் முடங்கிட வேண்டும் என்பது தான் கருணாநிதியின் விருப்பம் போலும்! எனவே தான் குறைகள் உள்ள ஒப்பந்தப் புள்ளிகளை மின் வாரியம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
அவ்வாறு செய்தால் டெண்டரில் வெற்றிப் பெறாதவர் நீதிமன்றம் செய்து தடையாணைப் பெற்று இந்த திட்டமே முடங்கி விடாதா? என கருணாநிதி பகல் கனவு கண்டு அதன் காரணமாக, இந்த அரசின் மீது அவதூறு சொல்லியுள்ளார்.
எந்தப் பணியையும் செய்யாமல், அடிக்கல் நாட்டிவிட்டாலே, திட்டம் துவங்கப்பட்டதாக கருணாநிதி தனது ஆட்சி காலத்தில், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு. தமிழக மக்களையும் ஏமாற்றியுள்ளார். உடன்குடி அனல் மின் நிலையம் போன்றே, தூத்துக்குடி நான்காம் நிலை 2X500 மெகாவாட் மின் நிலையம் அமைக்கப்படுவதாக 2007 ஆம் ஆண்டு அறிவித்து மின்சார வாரிய பொன்விழா மேடையில் அடிக்கல்லையும் கருணாநிதி நாட்டினார்.
அதன் பின்னர், அந்தத் திட்டத்திற்கு தெரிவு செய்த நிலத்தை மின்வாரியம் ஏன் பயன்படுத்தவில்லை? மின்வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க வழிவகை செய்தது ஏன்? என்பதை கருணாநிதி விளக்கத் தயாரா? 1,000 மெகாவாட் மின் வாரிய திட்டத்தை தனியாருக்கு தாரை வார்த்ததால் 525 மெகாவாட்டாக அது குறைந்தது பற்றி கருணாநிதி விளக்குவாரா?
கருணாநிதியால் தேர்வு செய்யப்பட்ட அந்த தனியார், மின் திட்டத்தை துவக்கவில்லையே? தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காகத் தான் கருணாநிதி இது போன்ற நடவடிக்கையை எடுத்தாரா? புரட்சித் தலைவி அம்மாவின் அரசு எந்த ஒரு அரசு திட்டத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கவில்லை என்பதையும் கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
உடன்குடி திட்டத்திற்கு நிலக்கரி கையாளும் சுய சார்பு துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் 19.3.2015 அன்று திறக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். உடன்குடி திட்டத்திற்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment