மன அழுத்தம். இந்த வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மன அழுத்தம் காரணமாக ஏற்படும் நோய்களே அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
பள்ளி செல்லும் குழந்தை களுக்கு படிப்பு, வீட்டுப்பாடம், இணக்கமில்லாத சக மாணவர்கள் மூலம் மன அழுத்தம் ஏற்படுகிறது. இளைஞர்களுக்கு பாடத்திட்டப் பளுவுடன், காதல், உடல் தோற்றம், நண்பர்களின் கேலி போன்றவை காரணமாகின்றன. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம், மோசமான பணிச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், உறவினருடன் சுமுக உறவு இல்லாதது, அடங்காத பிள்ளைகள் என்று பல பிரச்னைகள் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பண நெருக்கடி, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.
மன அழுத்தத்துக்கு ஆரம்பத் திலேயே சிகிச்சை பெறுபவர்கள் மிகவும் குறைவு. இது அதிகமாகும்போது அது உடல் நிலையைப் பல வழிகளில் பாதிக்கும். குடிப்பழக்கம், போதைப்பழக்கம், உடல் இளைத்தல், உடற்பயிற்சியற்ற சோம்பல் வாழ்க்கைமுறை, இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, மனப் பதற்றம், மன பயம், குடல் எரிச்சல் நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பல தொல்லைகளுக்கு மன அழுத்தம் வழிவிடும்.
குறுகிய கால மன அழுத்தம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை. ஆனால் நாட்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் ஆபத்தானவை. அதிக முறை மன அழுத்தத்துக்கு ஆளாகிறவர்களை மீண்டும் அமைதிநிலைக்குக் கொண்டு வருவது கடினம். இவர்கள் தனக்குத்தானே பேசிக் கொள்வதும், மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பதுமாக வாழ்வார்கள். தற்கொலைக்கு முயற்சிப்பதும் உண்டு. ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளதா என்பதை சில அறிகுறிகள் தெரிவித்துவிடும்.
ஆனால் அவற்றை உணரும் முன்பே அது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஞாபகமறதி, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, முக்கியமானவற்றில் முடிவெடுக்க முடியாத நிலை, பதற்றமான எண்ணங்கள், மனக்குழப்பம் போன்றவை மன அழுத்த நோயின் சில முக்கிய அறிகுறிகள். மன அழுத்தத்தில் பல வகைகள் உண்டு. அதற்கேற்ப அறிகுறிகள் மாறுவதும் உண்டு.
மன அழுத்தம் உள்ளதை அறிய இதுவரை பரிசோதனை முறை எதுவும் இல்லை. மருத்துவர்கள் தாங்கள் தயாரித்து வைத்திருக்கும் கருத்துப் பட்டியல் ஒன்றைக் கொடுத்து அதற்குப் பதில் கூறப் பணிப்பார்கள். அந்தப் பதில்களை வைத்து மனஅழுத்த வகையைக் கணிப்பார்கள். இது ஒரு மறைமுகமான நோய்க்கணிப்பு முறை. இதற்கு மாற்றாக இதை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் ஒரு ரத்தப் பரிசோதனையை இப்போது கண்டுபிடித்துள்ளனர், அமெரிக்காவில்.
சிகாகோ நகரத்தின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக மனநலம் மற்றும் நடத்தைசார் அறிவியல்துறை ஆராய்ச்சி யாளர்கள் ரத்தத்தில் பயோ மார்க்கர் (Biomarker) இருப்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
அது என்ன பயோமார்க்கர்?
உடலில் குறிப்பிட்ட நோய் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் உடலியல் உயிர்ப் பொருளுக்கு ‘பயோமார்க்கர்’ என்று பெயர். இது புரதம், கொழுப்பு, மரபணு, என்சைம் என்று எதுவாகவும் இருக்கலாம். களவுபோன வீட்டில் கைரேகைகளைப் பார்த்துத் திருடனைக் கண்டுபிடிக்கிற மாதிரிதான் இது. ஒருவர் உடலில் குறிப்பிட்ட பயோமார்க்கர் காணப்பட்டால் அவருக்கு அந்த பயோமார்க்கருக்குரிய நோய் உள்ளது என்று முடிவு செய்யப்படும். இதன் மூலம் மிக ஆரம்பக் கட்டத்தில் உள்ள நோய்களைக் கண்டுபிடித்துத் தடுத்துவிடலாம்.
மனஅழுத்த பயோமார்க் கர்களைக் கண்டுபிடித்த டாக்டர் ரெடியி (Dr.Redei) இது குறித்து விளக்கியபோது, ‘‘மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 32 பேரிடமும், மன அழுத்தம் பாதிப்பில்லாத 32 பேரிடமும் ரத்தப் பரிசோத னையை மேற்கொண்டோம்.
இவர்களுடைய ரத்தத்தில் இருந்து ஆர்என்ஏ மூலக்கூற்றைப் பிரித்தெடுத்து, நானோடிராப் ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் ஆராய்ந்தோம். அப்போது மன அழுத்தம் உள்ளவர்களின் ஆர்என்ஏவில் ADCY3, DGKA, FAM46A, IGSF4A/CADM1, KIAA1539, MARCKS, PSME1, RAPH1, TLR7 என்று மொத்தம் ஒன்பது வகை பயோமார்க்கர்கள் இருப்பதைக் கண்டோம். மன அழுத்தம் இல்லாதவர்களின் ரத்தத்தில் இந்த பயோமார்க்கர்கள் எதுவுமில்லை.
மன அழுத்தம் காணப்பட்ட மேற்சொன்ன 32 பேருக்கும் சிபிடி (Cognitive Behavioral Therapy CBT) எனும் சிகிச்சையைக் கொடுத்தோம். குணமான பிறகு மறுபடியும் ரத்தப் பரிசோதனையைச் செய்தோம். இவர்களின் ரத்தத்தில் அந்த பயோமார்க்கர்கள் ஒன்றுகூட இல்லை. ஆகவே, மன அழுத்தம் உள்ளவர்களின் ரத்தத்தில் இந்த பயோமார்க்கர்கள் காணப்படுவது உறுதியாகிறது.
பரம்பரையாக மன அழுத்தம் உள்ளவர்கள், குடும்பச் சூழல், பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் வர வாய்ப்புள்ளவர்கள் இந்தப் பரிசோதனை மூலம் முன்ன தாகவே தெரிந்து கொள்ளலாம். இவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு மன அழுத்தம் வராமல் தடுத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்.
No comments:
Post a Comment