உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா: 7 விக். வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது!
மெல்போர்னில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 183 ரன்களுக்குச் சுருட்டிய ஆஸ்திரேலியா பிறகு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ளது.
வெற்றிக்கணம்: 34-வது ஓவரை ஹென்றி வீச முதல் பந்தை ஸ்மித் மிட்விக்கெட்டில் புல் ஆடி பவுண்டரிக்கு விரட்ட ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 71 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 56 நாட் அவுட்.
கிளார்க் 74 பவுல்டு ஹென்றி (அவுட்): கிளார்க் தனது கடைசி ஒருநாள் போட்டியில் மிக அருமையாக விளையாடி 72 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
1987, 1999, 2003, 2007, 2015 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியா, குறிப்பாக 1999, 2003, 2007, 2015 ஆகிய உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் எதிரணியினரை பந்தாடியுள்ளது ஆஸ்திரேலியா என்றே கூற வேண்டும். 1996 இறுதிப் போட்டியில் மட்டும் இலங்கை ஆஸ்திரேலியாவை எளிதில் வென்றது என்று கூறலாம்.
தொடர் நாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார், அவர் சச்சினிடமிருந்து டிராபியைப் பெற்றார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஆவார் மிட்செல் ஸ்டார்க். ஒரு பவுலருக்கு தொடர் நாயகன் விருது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஆனால் அப்படித்தான் ஸ்டார்க் ஆதிக்கம் செலுத்தினார்.
ஸ்டீவ் ஸ்மித் உலகக்கோப்பையில் தனது 5வது அரைசதத்தை எடுத்து முடித்தார்.
மைக்கேல் கிளார்க் 74 ரன்களில் பவுல்டு ஆனார்.
அருமையாக, அழகாக ஆடி வரும் மைக்கேல் கிளார்க் சவுதி வீசிய 31-வது ஓவரில் அழகான 4 பவுண்டரிகளை விளாசினார்.
கடைசி ஒருநாள் போட்டியில ஆடும் கிளார்க் 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கண்டார்.
டேனியல் வெட்டோரி வீசிய 25-வது ஓவரில் மைக்கேல் கிளார்க் அருமையாக மேலேறி வந்து லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். சிக்ஸ் ஷாட் போன்றே தெரியாத அருமையான ஷாட்.
21-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா
ஹென்றி வீசிய 19-வது ஓவரில் மைக்கேல் கிளார்க் 2 அதிர்ஷ்டகர பவுண்டரிகள் அடித்தார். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் கையில் சென்றிருக்கும் கேட்ச். ஆனால் செல்லவில்லை.
ஸ்டம்பில் பட்ட பந்து ஆனால் பைல்கள் விழவில்லை: தப்பித்த ஸ்மித்
வார்னர் ஆட்டமிழந்த பிறகு நியூசிலாந்து அணியிடத்தில் புதிய உற்சாகம் பிறக்க விக்கெட் கைப்பற்றிய ஹென்றிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
15-வது ஓவரின் முதல் பந்து ஹென்றி வீச லெந்தில் விழுந்த பந்தை ஸ்மித் பின்னால் சென்று ஆட பந்து மட்டையில் பட்டு பின்னால் ஸ்டம்பை நோக்கி உருண்டு வந்து ஸ்டம்பில் பட்டது ஆனால் பைல்கள் அசையாமல் இருந்தது.
தப்பினார் ஸ்மித். நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் இப்போதைக்கு வாய்க்கவில்லை என்றே கூற வேண்டும்.
ஆஸ்திரேலியா 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள். வெற்றி பெற 112 ரன்கள் தேவை. ஸ்மித் 18 ரன்களில் ஆடி வருகிறார்.
வார்னர் அவுட்: ஹென்றி வீசிய 13-வது ஓவரின் முதல் பந்து ஷார்ட் பிட்சாக அமைய பவுண்டரி விளாசிய வார்னர், அதற்கு அடுத்த பந்து கொஞ்சம் கூடுதல் உயரம் பந்து எழும்ப அதனையும் புல் ஆடினார். பந்து மட்டையில் சரியாக சிக்காமல், மிட்விக்கெட்டில் பவுண்டரிக்குப் பாதிவழியில் கிராண்ட் எலியட்டிடம் கேட்ச் ஆனது.
கிளார்க் இறங்கியுள்ளார். அவரது கடைசி ஒருநாள் போட்டி. மைதானமே எழுந்து நின்று கைதட்டுகிறது.
வார்னர் 45 அவுட். கிராண்ட் எலியட் கேட்ச், பவுலர் மேட் ஹென்றி .
12-வது ஓவரை போல்ட் அருமையாக வீசினார். வார்னர் ஒரு பந்தை கட் செய்ய முயல பந்து உள்விளிம்பில் பட்டு ஸ்டம்புக்கு மிக அருகில் சென்றது. நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் இல்லை.
பிறகு இன்னொரு பந்து அபாரமான இன்ஸ்விங்கரை போல்ட் வீச வார்னர் பேடில் வாங்கினார். முறையீடு எழுந்தது. ஆனால் பந்து லெக்ஸ்டம்புக்கு வெளியே சென்றதாக நடுவர் நாட் அவுட் என்றார்.
10 ஓவர்கள் முடிவில் 5-வது உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்குத் தேவை 128 ரன்கள். போல்ட், ஹென்றி வீசிவருகின்றனர்.
மெல்போர்னில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 184 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடி வரும் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
வார்னர் 24 பந்துகளில் 28 ரன்களுடனும், ஸ்மித் 15 பந்துகளில் 11 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
ஆட்டத்தின் 2-வது ஓவரில் ஏரோன் பிஞ்ச் ரன் எடுக்காமல் டிரெண்ட் போல்ட் வீசிய இன்ஸ்விங்கருக்கு அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
3-வது ஸ்லிப்பை மெக்கல்லம் அகற்றிய போதே அது இன்ஸ்விங்கர் என்படை பிஞ்ச் கணித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கணிக்கவில்லை, பந்து அவரது பேடில் பட்டு பிறகு பேட் எட்ஜில் பட்டு போல்ட்டிடம் எளிதான கேட்ச் ஆனது.
அதன் பிறகு வார்னர் 4 பவுண்டரிகளை அடித்தார். அதில் சவுதி வீசிய 5-வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்தார் வார்னர்.
உலகக் கோப்பை சாம்பியனாக ஆஸி.க்கு 184 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்து அணி 183 ரன்களில் சுருண்டது.
ஆஸி. ஆக்ரோஷம்: 183 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து: கடைசி 7 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தது
மெல்போர்னில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தீவிரத்துக்கு முன்பாக முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து நிற்க முடியாமல் 183 ரன்களுக்குச் சுருண்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டது. ஆனால் பாக்னர், ஜான்சன், ஸ்டார்க் ஆகியோரது பந்து வீச்சில் நியூசிலாந்து தாக்கு பிடிக்க முடியாமல் 150/3 என்ற நிலையிலிருந்து பவர் பிளேயிற்குப் பிறகு 33 ரன்களில் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
கிராண்ட் எல்லியட், ராஸ் டெய்லர் சதக்கூட்டணி அமைத்தனர். ஆனால், ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சனை ஒரே ஓவரில் பாக்னர் வீழ்த்த ஆட்டம் திசைமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கடைசியில் 45 ஓவர்களில் 183 ரன்களுக்குச் சுருண்டது நியூசிலாந்து. ஜான்சன் 30 ரன்களுக்கு 3 விக்கெட். பாக்னர் 36 ரன்களுக்கு 3 விக்கெட். ஸ்டார்க் 20 ரன்களுக்கு 2 விக்கெட்.
1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 183 ரன்களையே எடுத்தது. அன்று இந்தியா மே.இ.தீவுகளுக்குச் செய்ததை இன்று ஆஸ்திரேலியாவுக்குச் செய்யுமா நியூசி?
ஜான்சன் பந்தில் மேட் ஹென்றி ஆட்டமிழந்தார்.
எல்லியட், வெட்டோரி அவுட்: 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து
நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வருகிறது. தற்போது 41-வது ஓவரில் ஜான்சன் பந்தில் வெட்டோரி பவுல்டு ஆனார். அவர் எடுத்த ரன்கள் 9. ஒரு பவுண்டரி அடித்தார், 21 பந்துகளைச் சந்தித்தார்.
முழு வேகத்துடன் ஒரு இன்ஸ்விங் யார்க்கர். பேடில் பட்டு பவுல்டு ஆனார் வெட்டோரி, மிட்செல் ஜான்சன் 2-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
அடுத்த ஓவரில் கிராண்ட் எலியட் விக்கெட்டை பாக்னர் வீழ்த்தினார். 82 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து ஆடி வந்த எல்லியட், ஸ்லோ பந்தைல் லெக் திசையில் அடிக்க முயன்றார், பந்து மட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் ஆஃப் திசையில் சென்றது. ஹேடின் பிடித்தார். நியூசி. சரிவு மயம்
பேட்டிங் பவர் பிளேயில் 5 ஓவர்களில் 15 ரன்களையே நியூசிலாந்தினால் எடுக்க முடிந்தது.
மீண்டும் தப்பித்தார் கிராண்ட் எலியட்
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து பாக்னரிடம் எல்லியட் விக்கெட்டையும் இழந்திருக்கும். 40-வது ஓவரில் பாக்னர் வீசிய இன்ஸ்விங்கர் அவரது பின்னங்காலைத் தாக்கியது நடுவர் அவுட் இல்லை என்று தீர்ப்பளித்தார். ஆனால் கிளார்க் ரிவியூ செய்தார். பந்து ஸ்டம்பின் மேல் பகுதியைத் தாக்கியது போல்தான் ரிவியூ கூறியது. ஆனால், நடுவர் நாட் அவுட் தீர்ப்பை 3-வது நடுவர் தக்க வைத்தார்.
லூக் ரோன்க்கியும் ஆட்டமிழந்தார்
மிட்செல் ஸ்டார்க் 37-வது ஓவரை வீச, கிளார்க் அருமையாக கேப்டன்சி செய்தார். தானே ஸ்லிப்பில் வந்து நின்றார். லெந்த்தில் விழுந்த வைடு பந்தை அடிக்க முயன்று எட்ஜ் செய்தார். கிளார்க் அருமையாகப் பிடித்தார்.
டெய்லர், கோரி ஆண்டர்சனை ஒரே ஓவரில் வீழ்த்தினார் பாக்னர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அபாரமாக ஆடி வந்த ராஸ் டெய்லர் சற்று முன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பவர் பிளேயின் முதல் ஒவரை ஜேம்ஸ் பாக்னர் வீச, முதல் பந்து ஸ்லோ பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே சென்றது. யார்க்கர் லெந்த். அதனை மட்டையைக் கொண்டு கிண்டிவிட்டார் ராஸ் டெய்லர், பந்து விளிம்பில் பட்டு ஹேடினிடம் கேட்ச் ஆனது.
கேட்சை தரையிலிருந்து சில இஞ்ச்கள் மேலாக ஹேடின் பிடித்தார். உண்மையான கேட்சா என்று சரிபார்க்கப்பட்டது. சரியான கேட்ச்.
புதிய பேட்ஸ்மென் கோரி ஆண்டர்சன் களமிறங்கினார் பாக்னரின் இதே ஓவரில் 3-வது பந்தில் பவுல்டு ஆனார். நியூசிலாந்து 150 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள். கிராண்ட் எலியட் ஒரு முனையில் 72 ரன்களுடன் ஆடி வருகிறார்.
எல்லியட், டெய்லர் சதக்கூட்டணி
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 39/3 என்று சரிவு கண்ட நியூசிலாந்து அணியை ராஸ் டெய்லர் மற்றும் கிராண்ட் எல்லியட் ஆகியோர் தங்களது சதக் கூட்டணி மூலம் தூக்கி நிறுத்த முயன்று வருகின்றனர்.
இருவரும் இணைந்து ஸ்கோரை சற்று முன் 34-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த எல்லியட் ஸ்கோரை 139 ரன்களுக்கு உயர்த்தினார். இதன் மூலம் முக்கியக் கட்டத்தில் ராஸ் டெய்லர், எல்லியட் சதக்கூட்டணி அமைத்து விளையாடி வருகின்றனர்.
21 ஓவர்களில் இருவரும் இணைந்து 100 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர்.
34-வது ஓவரை வீச வந்துள்ளார் ஜோஷ் ஹேசில்வுட். முதல் பந்தை அழகாக தேர்ட் மேன் திசையில் பவுண்டரி அடித்தார் கிராண்ட் எலியட்.
33-வது ஓவரில் ஷேன் வாட்சன் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். குளிர்பான இடைவேளை. மேக்ஸ்வெல் இதுவரை 7 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். கிராண்ட் எல்லியட்டையும் வீழ்த்தியிருப்பார். ஆனால் ரிவியூவால் எல்லியட் தப்பித்தார்.
கிராண்ட் எலியட் அபார அரைசதம்
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அரையிறுதி நாயகன் கிராண்ட் எலியட் அபார அரைசதம் கண்டு ஆடி வருகிறார். 51 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அவர் 50 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
கிராண்ட் எலியட் ஸ்டார்க் பவுன்சரை ஹூக் செய்தார் டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் சிக்சர் சென்றது. அருமையாக ஆடி வருகின்றனர் எலியட்டும், ராஸ் டெய்லரும்.
எலியட், ராஸ் டெய்லர் கூட்டணி இதுவரை 4-வது விக்கெட்டுக்காக 75 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
நடுவர் அவுட் கொடுத்து ரிவியூவில் தப்பித்தார் கிராண்ட் எலியட்
நியூசிலாந்தின் அரையிறுதி நாயகன் கிராண்ட் எலியட் சற்று முன் மேக்ஸ்வெல் பந்தில் நடுவர் தர்மசேனாவினால் எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் எலியட் ரிவியூ செய்தார்.
பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது ரீப்ளேயில் தெரிந்தது.
தீர்ப்பை மாற்றினார் 3-வது நடுவர். எலியட் நாட் அவுட். சரியாக ரிவியூ செய்தார் என்றுதான் கூற வேண்டும். ஆனாலும், பந்து திரும்பவேயில்லை. ஸ்வீப் செய்தார் எலியட் நேராக வாங்கினார். திரும்பாத பந்து எப்படி லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லுமாறு ரீப்ளேயில் எப்படித் தெரிந்தது என்பது விளக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில், ரன் குவிக்க முடியாமல் திணறிவரும் நியூஸிலாந்து அணி முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து தவிக்கிறது.
மெக்கல்லம், வில்லியம்சன், கப்தில் ஆட்டமிழந்த விதம்
மெல்போர்னில் சுமார் 80-90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் மெக்கல்லம் இன்று வெளுத்துக் கட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சுக்கும், தீவிரத்துக்கும் முன்னால் மெக்கல்லம் நிதானத்தை இழந்து வழக்கமான பாணியில் ஆடி ஆட்டமிழந்தார்.
முதலில் ஒரு பந்து அதிவேகமாக ஆஃப் ஸ்டம்பில் செல்ல அதை ஆட முடியாமல் பீட்டன் ஆனார். அடுத்த பந்து மேலேறி வந்தார். பந்து அவருக்கும் மட்டைக்கும் இடையில் புகுந்து சென்றது.
அடுத்த பந்து ஒன்று பவுன்சர் அல்ல யார்க்கர் என்று எதிர்பார்த்தோம். யார்க்கர் விழுந்தது. மெக்கல்லம் மட்டையை கொண்டு வர தாமதமானது, மட்டைக்கும் காலுக்கும் இடையே பந்து புகுந்து ஆஃப் ஸ்டம்பைத் தட்டியது.
ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ஆடி வந்த மார்டின் கப்திலுக்கு மிகச்சரியாக மைக்கேல் கிளார்க் மேக்ஸ்வெல்லை கொண்டு வந்தார். முன்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்று கட் ஆடினார். நேர் பந்து ஆஃப் ஸ்டம்பைத் தட்டியது. தவறான ஷாட் தேர்வில் கப்தில் பவுல்டு ஆனார்.
13-வது ஓவரில் மிகப்பெரிய விக்கெட்டான கேன் வில்லியம்சன் 12 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது மிட்செல் ஜான்சன் பந்து ஒன்று மிடில் அண்ட் லெக்கில் சற்றே நின்று வர தடுப்பாட்டம் நேராக ஜான்சன் கையில் கேட்ச் ஆனது. நியூசிலாந்து 39/3 என்று ஆனது. அதன் பிறகு டெய்லர், எல்லியட் அபாரமாக கொண்டு செல்கின்றனர்.
போட்டியில் முதல் ஓவரின் ஸ்டார்க் வீசிய 5-வது பந்தில் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கேப்டன் மெக்கல்லம் பவுல்ட் ஆனார். அற்புதமான பந்துவீச்சை அடித்து விளாச முற்பட்ட மெக்கல்லம் தவறான கணிப்பால் பவுல் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அதைத் தொடர்ந்து கப்டிலுடன் வில்லியம்சன் இணைந்தார். இந்த ஜோடி சற்றே நிதானமாக பேட் செய்யத் தொடங்கியது. ஆனால், 11.2-வது ஓவரில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் கப்டில் பவுல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
உலகக் கோப்பை 2015-ல் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கப்டில், இறுதிப் போட்டியில் 15 ரன்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து, நியூஸிலாந்து அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக 3-வது விக்கெட்டை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. வில்லியம்ஸன் 12.1-வது ஓவரில் ஜான்சன் பந்துவீச்சில் காட் அண்ட் பவுல்ட் ஆனார். அவர் 12 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களமிறங்கியது.
உலகின் 14 முன்னணி அணிகள் பங்கேற்ற 11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டம் இது. உலகமே எதிர்பார்த்த இறுதி ஆட்டத்தில் 4 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும், இதுவரை கோப்பையை வெல்லாத நியூஸிலாந்தும் போட்டி யுத்தம் மேற்கொண்டுள்ளன.
7-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்தப் போட்டியோடு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவிருக்கும் தங்கள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை கோப்பையை வென்ற திருப்தியோடு வழியனுப்புவதில் தீவிரமாக உள்ளது.
அதேபோல், 40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நியூஸிலாந்து அணி இந்த முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியைத் தவிர வேறு எந்த பெரிய போட்டியிலும் அந்த அணி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை.
No comments:
Post a Comment