சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது ஏதாவது ஒன்று தானாக உடைவதும், விழுந்து நொறுங்குவதும், சர்வ சாதாரணமாகி விட்டது. சில வாரங்களுக்கு முன் தான் மத்திய அமைச்சர் வெங்கையா நாயிடு வருவதற்கு சற்று முன் மேற்கூறை இடிந்து விழுந்தது. 37 வது முறையாக ஏற்பட்ட இந்த விபத்தில், பாதுகாப்பு படையினர் தாவிக் குதித்துத் தப்பித்தனர்.
இந்த விபத்து ஏற்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஒரு திடீர் விபத்து சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய புறப்பாடு பகுதி நுழைவு வாயில் எண் 2-ல் ஊழியர்கள் செல்லும் பாதை உள்ளது.
இந்த நுழைவு வாயில் உள்புறம் 12 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தது. இதைப்பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் உடைந்து விழுந்த கண்ணாடி சிதறல்களை அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்து சென்னை விமான நிலையத்தின் 38வது விபத்து. சென்னை விமான நிலையம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டது. கண்ணைக் கவரும் கண்ணாடிக் கூரைகள், கதவுகள் என்று இருந்தாலும், கட்டிடத்தின் தரத்தில் குளறுபடி நடந்திருக்கும் என்ற பேச்சுக்கு அடி போடுகின்றன இந்த தொடர் விபத்துக்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இதுவரை 11 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 11 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 10 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து விழுந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்து உள்ளன. மொத்தம் 37 முறை நடைபெற்ற இந்த சம்பவங்களில் 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதனால், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மட்டுமல்லாது, சென்று வரும் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு, எப்போது, எது விழும் அல்லது உடையும் என்ற ஐயம், விமான நிலையத்தினுள் நுழையும் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்து விடுகிறது. இது குறித்து புகார்கள் பல சென்றாலும், விமான நிலைய நிர்வாகம் அதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. மத்திய அமைச்சர் தலை தப்பியது என்று ஊடகங்களில் செய்து வெளியான போதே கண்டுகொள்ளாத நிர்வாகம் இந்த 38வது முறை மட்டும் கண்டுக்கவா போறாங்க….
No comments:
Post a Comment