Latest News

சிறுநீரகம் காப்போம்!

நோய் அரங்கம்

உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள், நம் வயிற்றின் பின்பக்கம், கீழ் முதுகுப் பகுதியில், முதுகுத்தண்டின் இருபுறமும், அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. சிறுநீரகம் ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும், 150 கிராம் எடையும் உடையது. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் (Nephrons) உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். அதாவது, சிறுநீரகத்தின் உயிர்மூச்சுகள்! வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ, அதுமாதிரி நம் உடலுக்கு சிறுநீரகம் முக்கியம்.

சிறுநீரகத்தின் பணிகள்

இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் சுமார் 25 சதவிகிதம் வரை சிறுநீரகம் பெறுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு, தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது. அதேவேளையில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது.

‘ரெனின்‘ எனும் ஹார்மோனை சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது. ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற ‘எரித்ரோபாய்ட்டின்’ (Erythropoietin) எனும் ஹார்மோனை சுரக்கிறது. வைட்டமின் டியை பதப்படுத்தி ‘கால்சிட்ரியால்’ (Calcitriol) எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச்சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது. நாம் சாப்பிடுகிற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்று கிறது. நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான். தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 – 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.

சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?

கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால், நாளடைவில் சிறுநீரகம் செயலிழந்து விடும். சிறுநீரகம் செயல் இழந்தால்?

சிறுநீரகம் செயலிழக்கும் நிலைமையை இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.

1. திடீர் சிறுநீரகச் செயலிழப்பு (Acute renal failure).

2. நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic renal failure).

வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்துபோய், நோய்த்தொற்று உண்டானாலோ, மருந்து அலர்ஜி ஆகிவிட்டாலோ திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். அப்போது சிறுநீர் பிரிவது குறைவது, முகம் வீங்குவது, உடலில் நீர்க்கோத்து பருமன் ஆவது போன்ற அறிகுறிகள் தோன்றும். பல நாட்களாக சிறிது சிறிதாக சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படுவது, குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது, பசியின்மை, வாந்தி, தூக்கமின்மை, சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கைகால்களில் வீக்கம் தோன்றுவது, மூச்சிறைப்பு போன்றவை நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்.

சிறுநீரகத் தொற்று

உடலில் சுத்தம் குறைவது மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப் பாதையைத் தொற்றும்போது ‘சிறுநீரக அழற்சி’ ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும். சிறுநீர் செல்லும்போது எரிச்சல், வலி ஏற்படும். சிறுநீர் கலங்கலாகப் போகும். முக்கியமாக, புதுமணத் தம்பதிகளுக்கு ‘ஹனிமூன் நெப்ரைட்டிஸ்’ (Honeymoon nephritis) என்று ஒரு நோய்த்தொற்று ஏற்படும். இது சிறுநீர்ப் புறவழி சுத்தமாக இல்லாத காரணத்தால் வருகிறது.

சிறுநீரில் ரத்தம்

சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே, சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கல் தொல்லை

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும்.

இதுதான் சிறுநீரகக் கல். இதன் அறிகுறிகள் இவை: முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறுகின்ற புறவழித் துவாரம் வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளலாம்.

பரிசோதனைகள்

ஒருவருக்கு சிறுநீரக நோய் வருமா, வராதா என்று முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்கு எந்தத் தொழில்நுட்பமும் இதுவரை இல்லை. இதுபோல் சிறுநீரகப் பிரச்னைகள் ஆரம்பத்தில் தெரியாது. பிரச்னைகள் பெரிதாகி ஆபத்தான கட்டத்துக்கு வந்தபிறகுதான் அறிகுறிகள் வெளியில் தெரியும். எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரை ரீதியாக சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், சிறுநீரில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறவர்கள் போன்றோர் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பான ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’
செய்து கொள்வது நல்லது.

முக்கியமாக, ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை, வயிற்று எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐவிபி பரிசோதனை (Intravenous pyelogram IVP), சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவை சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவும். சிறுநீரில் மைக்ரோ அல்புமின் அல்லது அல்புமின் வெளியேறினால், ரத்த யூரியா அளவு 40 மில்லி கிராம்/டெசி லிட்டருக்கு மேல், ரத்தக் கிரியேட்டினின் அளவு 1.2 மில்லி கிராம்/டெசி லிட்டருக்கு மேல் இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

சிகிச்சை முறைகள்

சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால், நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். உதாரணத்துக்கு, வாந்தி, பேதி காரணமாக உடலில் நீர்க்குறைவு ஏற்பட்டவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் உப்பு கலந்த நீரை ஊசி மூலம் உடலுக்குச் செலுத்தினால் சரியாகிவிடும். இதுபோல், நோய்த்தொற்று காரணமாக சிறுநீரகம் பழுதாகியிருந்தால், அதற்குரிய ஆன்டிபயாடிக்கை செலுத்தினால் பாதிப்பு சரியாகிவிடும். ஆனால், சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மருத்துவ சிகிச்சை மட்டும் போதாது. ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்கிற சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை ( Kidney Transplantation) செய்ய வேண்டியதும் வரும்.

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்!

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாதா மாதம் தங்கள் ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ள வேண்டும். காரணம், உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு வருவதைப் பெருமளவு குறைக்கலாம். சரியான ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் பாதரச அளவு. அது 129/89 என்று இருந்தால் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று பொருள். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கைமுறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கும் மேலே இருந்தால் மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்று ரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

ரத்தச் சர்க்கரை அளவோடு இருக்கட்டும்!

சர்க்கரை நோய் உள்ளவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் இருக்கிறது. இவர்களில் 30 சதவிகிதம் பேருக்குச் சிறுநீரகம் முழுமையாகச் செயல்படாமல் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆகவே, இப்போது சர்க்கரை நோயுள்ளவர்களும் பரம்பரை வழியாகச் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்களும் 30 வயதுக்கு மேல் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய சரியான சர்க்கரை அளவு 120 மில்லி கிராம்/டெசி லிட்டர்.

உப்பைக் குறையுங்கள்!

சத்தான, சமச்சீரான உணவைச் சாப்பிட்டு உடல் எடையைக் கட்டுப்படுத்தினால் ஆரோக்கியம் கைகூடும். இது சிறுநீரகத்துக்கும் நன்மை செய்யும். முக்கியமாக, உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். இது சிறுநீரகப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பை எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். தென்னிந்தியாவில்தான் தினமும் 20 கிராம் வரை உப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.

உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லெட், பிஸ்கெட் போன்ற நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். ‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவு கள், செயற்கை வண்ண உணவுகளில் உப்பு கூடுதலாகவே இருக்கும். இவற்றையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.

குடிநீர் அளவும் முக்கியம்!

வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப்பொருட்களின் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். அதேவேளையில் சிறுநீரகம் பாதிக்கத் தொடங்கி விட்டால், இந்த அளவுக்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. மருத்துவர் கூறும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும். இதையும் ஒரே மூச்சில் குடித்துவிடக்கூடாது. அவ்வப்போது சிறிய அளவில் தண்ணீர் குடிப்பதுதான் சரியான முறை.

புகை சிறுநீரகத்துக்குப் பகைசிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகைக்கும் பழக்கத்தால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ ரத்தக் குழாய்களைச் சுருக்கிவிடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து விடும். இவ்வாறு அதிகரித்த ரத்த அழுத்தம் சிறுநீரகத்தையும் பாதிக்கும். புகைப்பிடிப்பதால் சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். அப்போது குறைந்த அளவிலான ரத்தம்தான் சிறுநீரகத்துக்குச் செல்லும். இது சிறுநீரகத்தின் செயல்பாட்டையே பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் புகைப்பழக்கம் அதிகரிக்கும்.

சுய மருத்துவம் வேண்டாம்!

மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் வீரியமுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகளை அளவுக்கு மேல் சாப்பிட்டால் அல்லது அடிக்கடி சாப்பிட்டால் அவை சிறுநீரகத்தை பாதிக்கும். ஆகவே, அவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துக்கடைகளில் வாங்கிச் சாப்பிடாதீர்கள். அடுத்து, மாற்று மருத்துவம் என்கிற பெயரில் தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதைத் தவிருங்கள். காரணம், இந்தத் தகுதியில்லாத மாற்று மருத்துவர்கள் தயாரிக்கின்ற லேகிய மருந்துகளில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக் கூடியவை. எனவே, எச்சரிக்கை தேவை!

இவற்றையும் கவனியுங்கள்!

1. சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விடுவது நல்லது.

2. தினமும் குளிக்கும்போது ஆண், பெண் இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப் பாதையை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

3. சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் காபி, தேநீர், பிளாக் டீ போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோலா பானங்கள், இதர மென்பானங்கள், பால் பொருட்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்றவை ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையும் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது. கேழ்வரகு, கீரைகள், மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம்.

4. மது அருந்தாதீர்கள்.

5.தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் முக்கியம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.