வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் 1–வது வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இதற்கான புத்தகங்கள் தயாராகிவிட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
1–வது வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின்படி வரும் கல்வி ஆண்டில் இருந்து 1–ம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வரும் கல்வியாண்டில் (2015–16) பல்வேறு வாரியங்களை சேர்ந்த அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை 1–ம் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
1–ம் வகுப்பு தமிழ் பாட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை, மதுரை வட்டார அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.
சென்னை வட்டார அலுவலகம் வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை வட்டார அலுவலகமான மதுரை பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் விலை ரூ.60 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment