சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் , லீ குவான் யூ (91) உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பல பேட்டிகளில் மறக்காமல் குறிப்பிட்ட பெயர் லீ க்வான் யூ. குறிப்பாக அரசியல் பற்றிய கேள்விகளின் போது லீயின் பெயரை அவர் குறிப்பிடத் தவறியதில்லை. ஒரு முறை விகடனுக்கு அளித்த பேட்டியின்போது, உங்களுக்குப் பிடித்த தலைவர் யார் என ரஜினியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரஜினி, "சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ... தலைவன்னு இருந்தா அப்படி இருக்கணும்... அரசியல்னா அப்படி நடத்தணும்... அவரைப்பத்தி நிறைய நிறையப் புத்தகங்கள் படிச்சுட்டேன். ஆனா, பிரமிப்பு தீரவே இல்லை. இந்தியாவுக்கு இப்ப அப்படி ஒரு சர்வாதிகாரம் கலந்த ஜனநாயகத் தலைவர்தான் வேணும். அப்படி ஒரு தலைவர் வந்தா, கட்டாயம் நான் அவரோடு சேர்ந்து அரசியல் செய்வேன்!'' க்வான் யூ பற்றி ரஜினி முதல் முதலில் குறிப்பிட்டது இந்த பேட்டியில்தான். அதன் பிறகு பல ரஜினி ரசிகர்களுக்கும் பிடித்த தலைவராகிவிட்டார் லீ. 1923-ல் பிறந்த லீ க்வான் யூ, 1959-ல் சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமாராக இருந்தார். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். 1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத் திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம் ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.
2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதிய அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன் அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தவர் லீ.
No comments:
Post a Comment