உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று கடைபிடிக்கப் படுகிறது. அலாரம் சத்தத்திற்கு அரக்க பரக்க எழுந்திருக்காமல், ‘கீச்.. கீச்...' என்ற பறவைகளின் சத்தத்தால் கண் விழித்த நம் முன்னோர்கள் பாக்கியம் செய்தவர்கள். பறவைகள் மீது கொண்ட தீராக் காதலாலோ என்னவோ, குழந்தைகளுக்குக் கூட அவர்கள் அன்னம், மயில், சிட்டு எனப் பெயர் வைத்துக் கொண்டாடினார்கள்.
ஆனால், இன்று நகரங்களில் மட்டுமல்ல, சில கிராமங்களிலும் பறவைகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது. அப்படித் தான் சிட்டுக் குருவில் உலகளவில் அழிந்து அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்து விட்டது. சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள் ஆகும். இவை பெரும்பாலும் வனப்பகுதிகளில் வாழ்வதை விட மனிதர்களுடன் நெருங்கி இருக்கவே விரும்பும். செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், தொழிற்சாலைகள் அதிகரிப்பு, விளைநிலங்கள் வீட்டு மனைகளாக் கப்பட்ட காரணத்தால் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரை தேடுமிடங்கள் சுருங்கிவிட்டன. வயல்வெளிகளில் பயிர்களுக்கு ரசாயன தெளிப்பு அதிகரித்திருப்பதால், சிட்டுக்குருவிகள் முட்டை இட கூட்டைத் தேடும் அவலத்திற்கு ஆளாகியுள்ளது.
முன்பு உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் சிட்டுக்குருவிகள் அதிகளவில் இருந்தன. ஆனால், தற்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வீட்டில் சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து வைத்து, வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ அல்லது மரத்திலோ தொங்க விட்டால் கூட சிட்டுக்குருவிகளுக்குப் போதுமானது என்கிறார்கள் பறவை ஆர்வலர்கள். சிட்டுக்குருவி அழிவு குறித்து மக்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், கிருஷ்ணகிரி அருகே சில கிராமங்களில் சிட்டுக்குருவி வளர்ப்பு முழுவீச்சில் செயல்படுத்தப் படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment