திருச்சி: நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக திருச்சி சிறையில் கைதிகள் பேசிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வருகிறார். அவருக்கு இருமுறை கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்நிலையில்தான் சகாயத்தை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டப் போவதாக திருச்சி மத்திய சிறைக் குள் தண்டனைக் கைதிகள் பேசிக் கொண்டதாகக் கூறப்படும் திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
சகாயத்தின் சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்தார். அவர் விடுதலையாகி ஊருக்கு வந்ததும் சகாயத்தின் சகோதரரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், கூலிப் படையை வைத்து சகாயத்தை கொலை செய்யப்போவதாக சிறைக்குள் கைதிகள் பேசிக்கொண்டதாக தகவல் கூறினார். அப்போது சகாயம் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக இருந்தார். இதுகுறித்து சகாயத்திடம் தெரிவிக்கப்பட்டும் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். போலீஸ் பாதுகாப்பு கேட்கும்படி நாங்கள் எத்தனையோ முறை சொல்லியும் அவர், 'நேர்மை மட்டும் போதாது, துணிச்சலும் வேண்டும்' என்று சொல்லி பாதுகாப்புக் கேட்க மறுத்துவிட்டார் என்று சகாயத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமைச் செயலரிடம் கடிதம்
அதிகாரி சகாயத்தின் மகன் வற்புறுத்தலின்பேரில் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 22 ல் தலைமைச் செயலாளரைச் சந்தித்து திருச்சி மத்திய சிறைக்குள் கைதிகள் பேசிக் கொண்ட விவரத்தை சகாயம் கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு தேவை என்று கருதும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கடிதம் கொடுத்தார். ஆனால், 2 ஆண்டுகளாகியும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
போலீஸ் பாதுகாப்பு
கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சட்ட ஆணையராக நியமிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற உத்தரவுப்படியே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் அதுவும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும்.
வீட்டில் விசாரணை
இந்நிலையில் அண்மையில் சென்னையிலுள்ள சகாயத்தின் இல்லத்துக்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சகாயத்தைப் பற்றி அவரது மனைவியிடம் விசாரித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாது சகாயத்திற்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் கடிதமும் வந்திருப்பதால் இனியாவது சுதாரித்துக் கொண்டு அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சகாயத்தின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சகாயத்திற்கு பாதுகாப்பு
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி ரவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment